ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: வனத்துறை அறிவிப்பு

மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரையை அடுத்த சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரையை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் இன்று (ஆக.1) முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தீயணைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தாணிப்பாறையுடன் சேர்த்து, வாழைத்தோப்பு மற்றும் தேனி மாவட்டம், உப்புத்துறை வழியாகவும் பொதுமக்கள் வந்து செல்வர் என்பதால், அதற்கேற்ப இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இவற்றை கொண்டு வருவதை தடுக்கவும், மதுரை மாவட்ட வனப்பகுதிக்குட்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் வரும் பக்தர்களின் உடைமைகளை பரிசோதித்து அனுமதியளிக்கவும், வனச்சரகர் கார்த்திக் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மலையேறும் பக்தர்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க டி.கல்லுப்பட்டி மற்றும் வத்திராயிருப்பிலிருந்து தீயணைப்பு குழுவினரும், உசிலம்பட்டி மற்றும் வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும். இரவு கோயிலில் தங்க அனுமதியளிக்கப்படாது. வாழைத்தோப்பு வழியாக செல்லும் பக்தர்களுக்கு, வழியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சங்கிலிப்பாறை, சின்னபசுக்கடை, பச்சரிசி மேடு மற்றும் கோயிலுக்கு அருகில் உள்ள சுந்தரமகாலிங்கம் வேட்டை தடுப்பு கூடங்களில் தஞ்சம் அடையலாம். சாப்டூர் வழியாக செல்பவர்கள் வாழைத்தோப்பு வேட்டை தடுப்பு கூடாரத்தில் தஞ்சம் அடைந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: வனத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: