ரூ.176 கோடி மதிப்பீட்டில் வைகை வடகரை பைபாஸ் சாலை பணிகள் துவக்கம்: தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

மதுரை: கன்னியாகுமரி – வாரணாசி சாலையிலிருந்து, திண்டுக்கல் – மதுரை சாலையை இணைக்கும் வகையில், வைகை வடகரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கின. இதை, நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களுள் ஒன்றான மதுரைக்கு, திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் எளிதில் வந்து செல்ல, வைகை வடகரையில் புதிய பைபாஸ் சாலை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.176 கோடியில் அமைய உள்ள இந்த பைபாஸ் சாலைக்கான பூர்வாங்க பணிகள், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வந்தன. தொடர்ந்து, நேற்று பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் துவங்கின.

இத்திட்டத்தின் கீழ், சாலை அமையும் பகுதியில் இரு இடங்களில் ஓடைகள் செல்வதால் அவற்றின் நீரோட்டத்தை பாதிக்காத விதமாக, இரண்டு இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்படவுள்ளன. இப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோரிப்பாளையம் மற்றும் ஆவின் மேம்பாலங்களை ஆய்வு செய்த அவர், கோரிப்பாளையம் மேம்பாலத்திற்காக 250 மின் கம்பங்கள், 1,200 மீட்டர் தூர குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்களை இடமாற்றம் செய்யும் பணிகளையும், ஆவின் மேம்பாலத்திற்காக 131 மின்கம்பங்கள், 1,100 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்களை இடமாற்றம் செய்யும் பணிகளையும் விரைவில் துவக்க உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு பாலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவைகளின் தரத்தை, கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தார். அதில், இரண்டு பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை தரமாக இருப்பதை உறுதி செய்த அவர்், ஓராண்டுக்குள் பால பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்பணிகளின்போது நெடுஞ்சாலைத்துறையின் மதுரை மண்டல கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகன காந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், சுகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

The post ரூ.176 கோடி மதிப்பீட்டில் வைகை வடகரை பைபாஸ் சாலை பணிகள் துவக்கம்: தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: