பட்டுக்கோட்டையில் பரிதாபம்: சிக்னல் விளக்கு உடைந்து விழுந்து இருவர் படுகாயம்

பட்டுக்கோட்டை, ஆக. 1: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரில்முக்கியமான சுமார் 10 இடங்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல் விளக்குகள் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் அனைத்து சிக்னல் விளக்குகளும் செயல் இழந்துவிட்டன. ஏறக்குறைய சுமார் 6 ஆண்டுகளாக மழையிலும், வெயிலிலும் சிக்னல் விளக்கு கம்பங்கள் அப்படியே நின்றதால் அதன் தூர் ஓரங்கள் முழுவதும் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில் பேருந்து நிலையம் எதிர்புறம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு திரும்பும் வளைவில் செயலிழந்து இருந்த சிக்னல் விளக்கு நேற்று திடீரென உடைந்து கீழே விழுந்தது. இந்த சிக்னல் விளக்கு சுமார் 30 அடி உயரமும், 10 அடி அகலம், 5 இன்ச் கணமும் கொண்டது.

அந்த வழியாக ஒரு பைக்கில் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்க வட்ட பொருளாளருமான கிருஷ்ணமூர்த்தி (62), ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பூலாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் (70) ஆகிய இருவரும் பட்டுக்கோட்டையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற உள்ள ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கை கிருஷ்ணமூர்த்தி ஓட்ட, தன்ராஜ் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள வளைவில் சென்றபோது அவர்கள் மீது திடீரென சிக்னல் விளக்கு உடைந்து விழுந்தது.

இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post பட்டுக்கோட்டையில் பரிதாபம்: சிக்னல் விளக்கு உடைந்து விழுந்து இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: