வயநாட்டில் குவியல் குவியலாக சடலங்கள் மீட்பு; நிலச்சரிவு பலி 270 ஆக உயர்வு


* 250க்கும் மேற்பட்டோரை காணவில்லை
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
* 350க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

திருவனந்தபுரம்: வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை பகுதியில் மட்டும் 350க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 250 பேரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை இங்குள்ள சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வீடுகளோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்தவுடன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் அவர்களால் பல பகுதிகளை நெருங்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர். கேரள அரசு உடனடியாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியை கோரியது. சூலூரிருந்து விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும், அரக்கோணம், பெங்களூரு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து ராணுவத்தினரும், கண்ணூர் எழிமலையிலிருந்து கடற்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நேற்று முன்தினம் காலநிலை மிகவும் மோசமாக இருந்ததால் மாலை 6 மணிக்குப் பின்னர் ஹெலிகாப்டரை மிகவும் சவாலான அப்பகுதியில் இறக்கி நிலச்சரிவில் சிக்கிய பலரை விமானப்படையினர் மீட்டனர்.

ராணுவத்தினர் சூரல்மலையிலும், முண்டக்கையிலும் சகதிக்குள் புதைந்து கிடந்த ஏராளமான உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை 156 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று காலை 6 மணி முதல் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீட்புப் பணியை தொடங்கினர். தற்காலிக பாலம் வழியாக முண்டக்கை பகுதிக்கு சென்று சகதிக்குள் புதைந்திருந்த ஏராளமான உடல்களை மீட்டனர். இடிந்து கிடந்த வீடுகளில் இருந்தும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்று மேலும் 114 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முண்டக்கை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாக ஊராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இப்போது 50க்கும் குறைவான வீடுகள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன. மீதமுள்ள 350க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. இந்த வீடுகளில் இருந்த அனைவரும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. சூரல்மலை பகுதியில் 50க்கும் குறைவான வீடுகள் மட்டுமே நிலச்சரிவில் சிக்கின. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டுமே 150ஐ தாண்டிய நிலையில் சூரல்மலை பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

பாஜ-காங். எம்பிக்கள் வார்த்தை மோதல்
மக்களவையில் வயநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா, ‘‘வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, அங்கு நிலச்சரிவு பிரச்னையை ஒருபோதும் அவையில் எழுப்பியதில்லை. கேரள பேரிடர் மேலாண்மை அமைப்பு பரிந்துரைத்த போதிலும், மத அமைப்புகளின் நெருக்கடியால் வயநாட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை’’ என குற்றம்சாட்டினார். இதனால் அவையில் பாஜ, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய போது பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், ‘‘வயநாடு எம்பியாக இருந்தபோது, வயநாட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் தொடர்பாக ராகுல் காந்தி பலமுறை பேசி உள்ளார். பாஜ எம்பி தவறான தகவல்களை கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘வயநாட்டில் பெரிய சோகம் நடந்திருக்கிறது. மீட்பு பணியில் ராணுவத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. வயநாட்டில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் இருக்கின்றன. அதில் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

1000 பேரை மீட்ட ராணுவம்
மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘கண்ணூர் ராணுவ முகாமில் இருந்து சுமார் 200 வீரர்களும், மெட்ராஸ் பட்டாலியன் பிரிவினரும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களுடன் இணைந்து வயநாடு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ராணுவ வீரர்கள் 70 சடலங்களை மீட்டுள்ளனர். 1,000 பேரை பத்திரமாக காப்பாற்றி உள்ளனர். மருத்துவ குழு உட்பட 2 உதவி மற்றும் மீட்புக்குழுக்கள் திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்’’ என்றார்.

காதை பிளக்கும் சத்தத்துடன் உருண்டு வந்த பாறைகள் : உயிர் தப்பியவர் பரபரப்பு பேட்டி
நிலச்சரவில் உயிர் தப்பிய சூரல்மலை பகுதியைச் சேர்ந்த சுலைமான் கூறியது: நள்ளிரவு 1 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தபோது காதைப் பிளக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து பார்ப்பதற்குள் வீடு முழுவதும் தண்ணீரும், சகதியும் புகுந்தது. கம்பிகளும், மரத்தடிகள் மற்றும் பாறைகளும் வந்தன. என் மனைவி சகதிக்குள் சிக்கிக்கொண்டார். நான் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் தான் என்னுடைய மனைவியைக் காப்பாற்றினார். பின்னர் நாங்கள் அருகிலுள்ள என்னுடைய மகனின் வீட்டுக்கு ஓடிச் சென்றோம். அவர்களும் பயத்தில் இருந்தனர். பின்னர் நாங்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி ரோட்டுக்கு வந்தோம். அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்றோம். இந்த சமயத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனால் அந்த வீட்டிலிருந்தும் அனைவரும் வெளியே ஓடினோம். இதன் பின்னர் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏறி தப்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.

காட்டில் சிதறிக் கிடந்த உடல்கள்
சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் பலரது உடல்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவை சுமார் 25 கிமீ தொலைவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள போத்துகல் என்ற இடத்தில் சாலியார் ஆற்றில் கண்டு பிடிக்கப்பட்டன. நேற்று முன்தினம் 36 உடல்கள் இந்த ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. பல உடல்கள் கை, கால் இல்லாமல் காணப்பட்டன. பல உடல் பாகங்களும் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. நிலம்பூர் காட்டுக்குள்ளும் ஏராளமான உடல்கள் சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உள் வனப்பகுதியிலும் ஏராளமான உடல்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று கூடுதல் மீட்புப் படையினர் காட்டுக்குள் சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீண்டும் பலத்த மழை: மீட்பு பணி நிறுத்தம்
முண்டக்கை பகுதியில் சிக்கியவர்களை ராணுவத்தினர் தற்காலிக மரப்பாலம் வழியாக மீட்டு கொண்டு வந்தனர். நேற்று மாலை 5 மணி வரை விட்டு விட்டுத் தான் லேசான மழை பெய்து வந்தது. ஆனால் 5 மணிக்குப் பிறகு மிக பலத்த மழை பெய்தது. இதனால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. சூரல்மலைக்கும், முண்டக்கைக்கும் இடையேயான பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தப் பகுதியில் மீட்பு பணிக்காக வாகனங்கள் செல்ல தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவிலுள்ள ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வந்து பணியில் ஈடுபட்டனர். நேற்றே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழையால் நேற்று பணிகள் முடியவில்லை. இன்று பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே முண்டக்கை பகுதிக்கு வாகனங்களில் சென்று எளிதில் மீட்புப் பணிகளை நடத்த முடியும்.

பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்
வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து தகவல்களை கேட்டு கண்காணித்து வருகிறார். பிரதமரின் உத்தரவுப்படி, ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று (நேற்று முன்தினம்) இரவே வயநாடு சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவரிடமிருந்தும் தொடர்ந்து தகவல்களை பிரதமர் கேட்டறிகிறார். ஒன்றிய அரசு தரப்பில் கேரள அரசுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கேரள அரசுக்கு இன்று ₹145 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இன்னும் ₹394 கோடி மீதமுள்ளது’’ என்றார்.

அமைச்சர் காயம்
வயநாடு மாவட்டத்தில் மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவரது கார் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு ஸ்கூட்டர் எதிரே வந்தது. அதில் மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தின் மீது கார் மோதியது. இதில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராகுல், பிரியங்கா இன்று செல்கின்றனர்
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் நேற்று வயநாடு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல், பிரியங்கா இன்று வயநாடு செல்ல உள்ளனர். அங்கு மேப்பாடியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேச உள்ளனர். மருத்துவமனைகளுக்கு சென்று காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.

76 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன
நிலச்சரிவில் சிக்கி பலியான 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீட்கப்படுகின்ற உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுவரை கிடைத்த உடல்களில் 76 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து காணப்படுவதாலும், அவர்களது உறவினர்கள் அங்கு இல்லாததாலும் உடல்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

The post வயநாட்டில் குவியல் குவியலாக சடலங்கள் மீட்பு; நிலச்சரிவு பலி 270 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: