கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடர்: உயிரிழப்பு எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு.! மீட்பு பணிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைப்பு

வயநாடு: வயநாடு நிலச்சரிவு பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. சாலியார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோரின் சடலங்கள், நிலச்சரிவு நடந்த மேப்பாடி பகுதிக்கு அடையாளம் காண ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது.

குழந்தைகள், பெண்கள் உள்பட 238 பேர் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இதுவரை 160 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 191 பேரைக் காணவில்லை என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முண்டக்கை பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்கும், அட்டமலா, சூரல்மலா பகுதிகளிலும் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்று கூடுதலாக 132 ராணுவத்தினர் மீட்புப் பணிகளுக்காக வந்தடைந்துள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. மீட்கப்பட்டுள்ள உடல்களுக்கு நேற்றிரவிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலும் தலசேரியிலும் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

The post கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடர்: உயிரிழப்பு எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு.! மீட்பு பணிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: