நீக்கப்பட்ட பகுதியை பிரதமர் பதிவிட்டது அவையை மீறிய செயல் மட்டுமின்றி அவையை அவமதிப்பதாகும்: காங்கிரஸ் நோட்டீஸ்!!

டெல்லி : அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவையில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூருக்கும் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அனுராக் தாகூர், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். கண்டனங்கள் வலுத்ததை அடுத்து அனுராக் தாகூரின் அவதூறான உரையை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம்பிர்லா நீக்கினார்.

ஆனால் அனுராக் தாகூரை பிரதமர் மோடி பாராட்டி ட்வீட் செய்தார். அதில், “என்னுடைய இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த சக எம்.பி. அனுராக் தாகூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும். இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் உண்மைகள் மற்றும் நகைச்சுவையில் சரியான கலவை, “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவை உரிமையை மீறியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார் காங். எம்.பி. சரண்ஜித் சிங். அந்த கடிதத்தில், “பாஜக எம்.பி. அனுராக் தாகூர் செவ்வாய்க்கிழமை மக்களவையில் பேசிய அவதூறான உரையை நீக்கினார் சபாநாயகர். ஆனால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியின் வீடியோ பதிவை பிரதமர் பதிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை யாரும் பதிவிடக் கூடாது என்பது மக்களவையின் விதியாகும்.நீக்கப்பட்ட பகுதியை பிரதமர் பதிவிட்டது அவையை மீறிய செயல் மட்டுமின்றி அவையை அவமதிப்பதாகும். அவை விதிகளின்படி பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர அனுமதிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நீக்கப்பட்ட பகுதியை பிரதமர் பதிவிட்டது அவையை மீறிய செயல் மட்டுமின்றி அவையை அவமதிப்பதாகும்: காங்கிரஸ் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: