இந்நிலையில் திருவிழாவை காண சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசன் என்கிற கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) உள்பட 17 பேர் வேளாங்கண்ணிக்கு வந்தனர். பின்னர் நேற்று காலை 7 மணிக்கு பூண்டி மாதா கோயிலுக்கு வந்தனர். கொள்ளிடம் ஆறு அருகில் அவர்களே சமையல் செய்தனர்.
அப்போது பிராங்கிளின் உட்பட 5 பேர் அங்குள்ள சந்தன மாதா கோயில் அருகே கொள்ளிடம் ஆற்றை பார்த்ததும் இறங்கி குளிக்க முடிவு செய்து தண்ணீரில் இறங்கினர். ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தபோது திடீரேன 5 பேரும் நீரில் மூழ்கினர். அவர்கள் அலறும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கலையரசன், கிஷோர் ஆகிய 2 பேர் சடலங்களை முதலில் மீட்டனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கொள்ளிடம் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய மேலும் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மனோகரன் என்பவர் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் 3 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
* பிறந்த நாளில் இறந்த சோகம்
தண்ணீரில் மூழ்கிய பிராங்கிளினுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதேபோல கடந்த 2022ம் வருடம் தூத்துக்குடியிலிருந்து வந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
* டெலிவரி பாய்ஸ்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 5 பேரும் சென்னையில் தனியார் ஆன்லைன் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
The post திருவிழாவிற்கு வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 5 பேர் பரிதாப பலி: 3 பேர் சடலம் மீட்பு, 2 பேரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.