அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்- ல் சேர அனுமதி.. உத்தரவு நகலை இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட ஒன்றிய அரசு உத்தரவு!

டெல்லி : அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைவதற்கான அனுமதி உத்தரவு நகலை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆதரித்து ஆர்எஸ்எஸ் பிரசாரம் செய்யவில்லை. மக்களவை தேர்தலில் பாஜவின் மோசமான செயல்பாடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட சமீப நாட்களாக பாஜ அரசை விமர்சித்து கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, கடந்த 9ம் தேதியிட்ட ஒன்றிய அரசின் அரசாணையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், ’58 ஆண்டுக்கு முன் 1966ல் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான உத்தரவு மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது’’ என கூறியிருந்தார். இந்த முடிவை ஆர்எஸ்எஸ், பாஜ தலைவர்கள் வரவேற்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், அனுமதி தொடர்பான உத்தரவு நகலை உள்துறை அமைச்சக இணையதள முகப்பில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

The post அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்- ல் சேர அனுமதி.. உத்தரவு நகலை இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட ஒன்றிய அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: