வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் மெகா சைஸ் பள்ளத்தால் அடிக்கடி விபத்து: உயிரிழப்பு ஏற்படும் முன் உடனே சரிசெய்ய கோரிக்கை

வடமதுரை: வடமதுரை- ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். வடமதுரையில் இருந்து எரியோடு, வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. வேடசந்தூரை சுற்றியுள்ள டெக்ஸ்டைல் மில்கள், தொழிற்சாலைகளின் வாகனங்கள் இச்சாலையிலே பயணிக்கின்றன. மேலும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பாலக்காடு திருச்சூர், கோட்டையம் கோழிக்கோடு ஆகிய ஊர்களில் இருந்து பழநி வழியாக வரும் வாகனங்கள் திருச்சி, சென்னை செல்வதற்கு இந்த சாலையைத்தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த மாநில நெடுஞ்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இந்த சாலையை அகலப்படுத்தி புதுப்பித்தனர். இந்நிலையில் தென்னம்பட்டியை அடுத்த ஆண்டிபட்டி பிரிவுக்கும், கெச்சாணிபட்டிக்கும் இடையே தனியார் ஆயில் நிறுவனம் எதிரே மாநில நெடுஞ்சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (49) கூறுகையில், இச்சாலை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டது.

அதற்குள் சாலையில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த பள்ளத்தால் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி கை கால் முறிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாததால் பெரியளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படும் முன் உடனடியாக சாலையில் உள்ள பெரும் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் மெகா சைஸ் பள்ளத்தால் அடிக்கடி விபத்து: உயிரிழப்பு ஏற்படும் முன் உடனே சரிசெய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: