ஆற்றில் மிதந்து வந்த 60 உடல்கள் மீட்பு.. வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 3 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரம் சாலியாற்றில் மிதந்து வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் 60 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர்.

மலப்புரத்தில் இருட்டுக்குத்தி, பொதுக்கல்லு, பனம்காயம், போதனம் ஆகிய இடங்களில் இருந்து சாலியாற்றில் 60பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 26 பேரின் உடல்கள் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் உடல்கள் தலை, கை, கால்கள் துண்டாகி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனிடையே வயநாடு நிலச்சரிவில் மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய 3 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு தனித் தீவுகளான இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

The post ஆற்றில் மிதந்து வந்த 60 உடல்கள் மீட்பு.. வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: