பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகள் : ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!!

டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.குறிப்பாக பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்,
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

The post பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகள் : ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!! appeared first on Dinakaran.

Related Stories: