காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

 

ஈரோடு, ஜூலை 31: காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியதால், அணையில் இருந்து உபரிநீர் 23 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், காவிரியில் வெள்ள அபாய அச்சம் நீங்கும் வரை அத்தியாவசியத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுமுறை எடுக்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அனைவரும் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: