வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என புகார்: நெம்மேலி ஊராட்சியில் பரபரப்பு


மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே நெம்மேலி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் கிணற்றை காணவில்லை என மனு கொடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, வட நெம்மேலி, திருவிடந்தை, பட்டிப்புலம், ஆலத்தூர், தண்டலம் ஆகிய 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் நெம்மேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்தது. நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் பட்டிப்புலம் வரலட்சுமி லட்சுமிகாந்தன், வட நெம்மேலி பொன்னுரங்கம், திருவிடந்தை அமுதா குமார், தண்டலம் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிக்குமார், திருப்போரூர் ஒன்றிய துணை சேர்மன் சத்யா சேகர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம், மருத்துவ காப்பீடு திட்டம், கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிடர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து 450க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, விரைவில் மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், தாசில்தார் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, பேரூர் பகுதியை சேர்ந்த சீமான் என்பவர் தனது மாமா ஆண்ட்ரூஸ் என்பவர் கிறிஸ்டியன் மிஷ்னரி மூலம் 400 ரூபாய் லோன் பெற்று பேரூரில் அவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டினார். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை மட்டும் வேறொருவருக்கு விற்பனை செய்து விட்டார். ஆனால், கிணற்றை விற்பனை செய்யவில்லை. தற்போது, கிணற்றுக்கு செல்ல வழி மட்டுமே உள்ளது. ஆனால், கிணறு காணவில்லை, என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடிவேல் காமெடி நிஜமாகி உள்ளது. நேற்று, நெம்மேலியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தங்களுக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை. அதனை, மீட்டுத்தர வேண்டும் என சீமான் என்பவர் மனு கொடுத்தார். மனுவை, பெற்ற அதிகாரிகள் படித்துப் பார்த்து அதிர்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

The post வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என புகார்: நெம்மேலி ஊராட்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: