தம்பதியர் ஒற்றுமையை காக்கும் நாமம்

ஸ்வாதீன வல்லபா

இப்போது நாம் பார்க்கப்போகும் நாமம் ஸ்வாதீன வல்லபா என்பதாகும். இந்த நாமமும், இதற்கு முந்தைய இரண்டு நாமங்களையும் சேர்த்து சிவ காமேஸ்வரஅங்கஸ்தா, சிவா நாமங்கள் சிவசக்தி ஐக்கியத்தினுடைய சம்மந்தத்தை சொல்கிறது என்று பார்த்தோம். பிரம்மமானது தன்னை இரண்டு நிலைகளில் சிவமாகவும் சக்தியாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும்போது அந்த இரண்டுக்கும் இருக்கக்கூடிய சம்மந்தம் எப்படியிருக்கிறது. அந்த சம்மந்தம் எப்படி செயல்படுகின்றது என்று பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது இந்த மூன்றில் முதல் நாமாவாக இருக்கக்கூடிய சிவகாமேஸ்வரங்கஸ்தா என்பது, ரூப சாமரஸ்யம் (ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் தன்மை இரண்டாகத் தோன்றும். ஆனால், பிரிவற்ற நிலை) என்று பார்த்தோம். இரண்டாவதாக இருக்கக் கூடிய சிவா எனும் நாமம், நாம சாமரஸ்யம் என்று பார்த்தோம். ரூப சாமரஸ்யத்தைப் பார்க்கும்போது அந்த ரூபத்தினுடைய தியானம். இந்த சாதகன் அந்த ரூபத்தை எப்படி தியானிக்கிறான் என்பதுதான் அங்கு விஷயமாக இருந்தது. நாம சாமரஸ்யமான சிவா என்பதை பார்க்கும்போதுதான் இந்த சாதகனானவன் நாம ஸ்மரணை எப்படி இந்த சாதகனுக்குள் வேலை பார்க்கிறது. இந்த நாமத்தினுடைய வேலை அங்கு என்ன என்பதைத்தான் சென்ற நாமத்தில் பார்த்தோம்.

இப்போது இந்த மூன்றாவது நாமாவானது, ஸ்வாதீன வல்லபா என்பதாகும். இந்த நாமத்தில் வல்லபா என்கிற சப்தம் இருக்கிறது. இந்த வல்லப என்பது புல்லிங்கம். ஆண்பால். வல்லபா என்றால் ஸ்தீரீ லிங்கம். பெண் பால். இந்த வல்லபா – வல்லபஹ என்றால் ஒரு விஷயத்தை செய்யக்கூடிய ஆற்றலுக்கு வல்லபம் என்று பெயர். எதையுமே செய்யக்கூடிய ஆற்றல். இந்த வல்லபம் என்கிற வார்த்தையிலிருந்துதான் நாம் தமிழில் சொல்லக்கூடிய வல்லமை என்கிற வார்த்தை வந்தது. வல்லமை தாராயோ என்று பாரதியார் பாடியிருக்கிறார் அல்லவா. அதுதான் இங்கு வல்லபா என்பதும் ஆகும். அப்போது வல்லமை தாராயோ என்றால் என்னவெனில், ஒரு விஷயத்தை நிகழ்த்தக்கூடிய ஆற்றலைக் கொடு என்பதாகும். ஒருவரைப் பார்த்து அவர் இதிலெல்லாம் வல்லவர் என்று சொல்கிறோம் அல்லவா… அதெல்லாம் இந்த வார்த்தையிலிருந்து வந்ததுதான். இதிலிருந்துதான் சர்வ வல்லமை என்றும் சொல்கிறோம். Omni potent என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். எதுவும் செய்யக்கூடிய ஆற்றல். இப்படி எதுவும் செய்யக்கூடிய ஆற்றலென்பது பிரம்மத்தினுடைய முக்கியமான தன்மை. பிரம்மம் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்தது. சர்வ வல்லமை உடையது. இப்போது இந்த இடத்தில் வல்லபா என்று அம்பாளுக்கு சப்தம் வருகிறதல்லவா… அது எதைக் குறிக்கிறதெனில், அவள் ஆற்றல் மிகுந்தவள். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆற்றல் மிகுந்தவள் என்று மட்டும் சொல்லாமல், ஸ்வாதீன வல்லபா என்று வர்ணிக்கிறார்கள். இதை பிரித்துப் பார்க்கும்போது ஸ்வ ஆதின வல்லபா… என்று பிரிக்கலாம். ஸ்வ என்றால் தனக்கு, ஆதினம் என்றால் தனக்கு உட்பட்டது. மூன்றையும் சேர்த்துப் பார்த்தால் சுவாமிக்கு அம்பாள் வல்லபையாக விளங்குகிறாள். அம்பாளுக்கு ஸ்வாமி வல்லபர். அதாவது அம்பாளுடைய ஆற்றலுக்கு சுவாமி உட்படுவார். சுவாமியினுடைய ஆற்றலுக்கு அம்பாள் உட்படுவாள். உதாரணமாக ராமரைச் சொல்லும்போது சீதா வல்லபர் என்று சொல்கிறோம் அல்லவா? கிருஷ்ணரைச் சொல்லும்போது ருக்மிணி வல்லபர் என்று சொல்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம் எனில், ஒருவர் இன்னொருவருக்கு இணையாக இயங்கும் (complementry action), ஒன்றுக்கொன்று உட்பட்டு நடக்கும். இப்போது இங்கு ஸ்வாதீன வல்லபா என்று சொல்லும்போது, தனக்குரியவராக இருக்கக்கூடிய ஸ்வாமியை, தன்னுடைய அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறாள். தனக்கு கட்டுப்
படக்கூடிய ஸ்வாமியை உடையவள்.

ஸ்வ ஆதீன வல்லபா என்று சொல்லும்போது, தனக்கு உட்பட்ட , தனக்கு கட்டுப்படக்கூடிய வல்லபரை உடையவள். இங்கு கட்டுப்படக்கூடிய வல்லபர் யாரெனில், சுவாமி. இந்த நமக்கு நமக்கு என்ன காண்பிக்கிறது. தனக்கு அதாவது அம்பாளுக்கு அவர் கட்டுப்படுவார் என்று சொல்வதில் உள்ள சூட்சுமம் என்ன? தனக்கு அவர் கட்டுப்படுகிறார் என்று சொல்லும்போதே, அங்கு இன்னொரு பொருளும் வெளிப்படுகின்றது… அவருக்கும் அதாவது சுவாமிக்கும் அம்பாள் கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதுதான் இங்கு விஷயம். சக்தி தத்துவத்திற்கு சிவ தத்துவம் கட்டுப்படும் எனில், சிவ தத்துவத்திற்கு சக்தி தத்துவமும் கட்டுப்படும். அப்போது இரண்டும் ஒன்றோடு ஒன்று, ஸ்வாமிக்கு அம்பாளும் அம்பாளுக்கு ஸ்வாமியும் இருவரும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று கட்டுப்பட்டவர்கள். ஏன், இரண்டு பேரும் கட்டுப்பட்டவர்களெனில், இங்குதான் ஒரு சூட்சுமம் வருகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

பிரம்மம் தன்னை இரண்டாக சிவமாகவும், சக்தியாகவும், ஞானமாகவும், கருணையாகவும் வெளிப்படுத்துகிறது என்று பார்த்தோம். இப்போது இப்படி இரண்டாக வெளிப்படும்போது, சிவம் ஞானமாகவும், சக்தி கருணையாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பார்த்தோம். இப்போது இரண்டாக வெளிப்படும்போது பரஸ்பரம் இந்த இரண்டுக்குமிடையில் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஏனெனில், அந்த ஒரு பிரம்மம்தான் தன்னை இரண்டாக வெளிப்படுத்திக் கொள்கிறது. அப்போது இந்த சிவ சக்தி சம்மந்தம் பரஸ்பரம் ஒன்றையொன்று ஈர்க்கக் கூடியது. அப்படி ஒன்றையொன்று ஈர்ப்பதினால் ஞானம் கருணையையும், கருணை ஞானத்தையும் ஈர்க்கிறது. அப்படி ஈர்ப்பதினால் என்ன ஆகிறதெனில் ஒன்றுக்கொன்று கட்டுப்படுகின்றது. அப்படி கட்டுப்படுவதற்கான காரணம் என்னவெனில், இந்த வஸ்து இருக்கிறதெனில் இது வெளியில் வேறு எதனாலும் கட்டுப்பட முடியாது. அதனாலேயே தனக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கொள்கிறது. வெளியிலிருந்து எந்த அன்னிய வஸ்துவும் இதைக் கட்டுப்படுத்த முடியாததனால் அனன்யமாக கட்டுப்பட்டுக் கொள்கிறது. அனன்யம் எனில் பிரிவற்ற நிலை… தனக்கு அன்னியமாக இன்னொன்றை பார்க்காத நிலை. ஏனெனில், இன்னொன்று என்று இரண்டாவதாக இன்னொரு வஸ்துவே இல்லை.

அதனால்தான் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியோ அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தியோ அதை உனக்கு வெளியிலிருந்து கொடுக்க முடியாது. அதை நீயே அறிந்து கொள் என்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்வதே அனுக்கிரகமாகும். இங்கு அது என்பது அந்த சொரூபமான பிரம்ம நிலை. அப்போது அந்த குருவானவர் அதை உங்களுக்கு சுட்டிக் காட்டுவார். அப்படி சுட்டிக் காட்டுதலே அருளுதலாகும். அந்த அருளுதலும் கூட அந்த வஸ்துவின் செயலின்றி வேறில்லை. எது ஒன்றோ உள்ளே சத்தியமாக இருக்கிறதோ அது வெளியே வந்து உள்ளே பார் என்று உள்நோக்கி திருப்பும்.

இப்போது பாருங்கள் ஸ்வாதீனம் என்றால் எந்தவித தங்கு தடையும் இல்லாமல், அம்பாளும் சுவாமியும் ஒருவருக்கொருவர் வல்லமை மிக்கவர்களாகவும், ஞானமும் கருணையும்போலும் தன்னியல்பாக சொரூபமாக விளங்குகின்றனர். இந்த வல்லபா என்கிற நாமமானது இரண்டு பேருக்கும் பொருந்தும். ஏனெனில், சுவாமி சர்வ வல்லமை உடையவர். அம்பாள் சர்வவல்லமை உடையவள். இப்போது எங்கு சர்வவல்லமை உடையவர்கள் இருக்கிறார்களோ அவர்கள்தான் மற்றவர்களை கட்டுப்படுத்துவார்கள். அங்கு ஒரு domination வரும். இப்போது இங்கு இரண்டு பேருமே சர்வவல்லமை உடையவர்கள். இங்கு இரண்டு பேருமே தனக்கு ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டுக் கொள்கிறார்கள். இதிலிருந்தே இந்த சம்மந்தம் இந்தக் கட்டுப்பாடு என்பது, ஒரு domination ஆல் வரக்கூடிய கட்டுப்பாடு இல்லை. அனன்யதா பாவத்தில் வரக்கூடிய கட்டுப்பாடு என்பது தெரிய வருகிறது.

Ambal is being bound to Swami and Swami is being bound to Ambal not because of their domination. Because of their swarupam. சாதாரண உலகியல்ரீதியாக பார்த்தால், இரண்டு அதிகார மையத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். மாறாக அங்கு மோதல்தான் வரும். ஈகோதான் வரும். ஆனால், இங்கு சிவ சொரூபத்திலும் சர்வ வல்லமைதான் இருக்கிறது. சக்தி சொரூபத்திலும் சர்வ வல்லமைதான் இருக்கிறது. ஆனால், அந்த சர்வ வல்லமை ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.

அன்னியமாக இல்லாமல் அனன்யமாக இருக்கிறது. பொதுவாக எல்லோரும் சிவம் பெரியதா சக்தி பெரியதா… சிவம் இருந்தாதானே சிவம் சக்தி இருந்தாதானே சக்தி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தத்துவார்த்தமாகப் பார்த்தால் இந்தக் கேள்வியே அர்த்தமற்றது. அந்தக் கேள்வியே எழுவதற்கான வாய்ப்பே இல்லாத இடத்தில்போய், நாம் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் complmentry forces என்பார்கள். ஒன்றோடு ஒன்று இதனால் அதுவும், அதனால் அதுவும் இரண்டும் இணைந்து அனன்யமாக வேலை பார்க்கும். இன்னொரு விஷயத்தினால் கட்டுப்பட முடியாது. ஏனெனில், இன்னொரு விஷயமே அங்கு இல்லை.

தேவி மகாத்மியத்தில் அம்பாள் தேவர்களுக்குச் சொல்லும்போது, என்னைத் தவிர இன்னொரு பொருள் இல்லை என்று உபதேசிக்கிறாள். அது ஏகமேவ அத்வீதீயம் பிரம்ம… என்கிற நிலை. ஆனால், அந்த நிலையில் ஞானமும் கருணையும் செயல்பட வேண்டும். எப்படி செயல்படுகிறதெனில், சிவமாகவும் சக்தியாகவும் செயல்படுகிறது. அப்படிச் செயல்படுகின்றபோது வல்லபமாக செயல்படுகின்றது. ஒன்றுக்கொன்று ஸ்வாதீனமாகச் செயல்படுகிறது. அதனால்தான் இந்த இடத்தில் அம்பாளுக்கு ஸ்வாதீன வல்லபா என்கிற நாமம் வருகின்றது.

இதற்கு முந்தைய இரண்டு நாமங்களில் ரூப சாமரஸ்யம், நாம சாமரஸ்யம் பார்த்தோம். அப்போது இந்த நாமம் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறதெனில், அதிகார சாமரஸ்யத்தை காண்பித்துக் கொடுக்கிறது. சிவ சக்தி ஐக்கிய சம்மந்தம் என்பது ரூபத்தாலும் ஒன்றானவர்கள், நாமத்தாலும் ஒன்றானவர்கள், அதிகாரத்தாலும் ஒன்றானவர்கள்.
(சுழலும்)

The post தம்பதியர் ஒற்றுமையை காக்கும் நாமம் appeared first on Dinakaran.

Related Stories: