பதவி நீக்கம் செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு; யோகியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 10 பேரவை தொகுதி இடைத்தேர்தல்: உ.பி மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் பாஜக தலைமை முடிவு

டெல்லி: யோகியை பதவி நீக்கம் செய்யக் கோரிய கோரிக்கையை பாஜக தேசிய தலைமை நிராகரித்த நிலையில், 10 தொகுதி இடைத்தேர்தல் விசயத்தில் அவருக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 33 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றிபெற முடிந்தது. பாஜகவின் தோல்விக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் காரணம் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையிலான உட்கட்சி கோஷ்டிகள் தேசிய தலைமையிடம் வலியுறுத்தி வந்தன. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏக்களில் 9 பேர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால், அந்த சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதனால் அந்த 9 தொகுதியுடன் சேர்த்து, சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மொத்தம் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. விரைவில் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், கடந்த 2 நாட்களாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத்தில் தலைமை மாற்றத்திற்கான கோரிக்கை எழுந்த நிலையில், 10 சட்டப் பேரவை இடைத்தேர்தலை வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் யோகி ஆதித்யநாத்துக்கு தேசிய தலைமை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தேசிய தலைவர்கள் கூறுகையில், ‘யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்ய துணை முதல்வர் மவுரியாவும் அவரது கூட்டாளிகளும் தேசிய தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வீழ்ச்சிக்கு யோகியின் ஆட்சி நிர்வாகமே காரணம் என்றும் குற்றம்சாட்டினர். மக்களவை வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மூத்த தலைவர்களின் கருத்துகளை யோகி கேட்கவில்லை என்றும் புகார்களை தெரிவித்தனர். யோகிக்கு எதிராக அவசரகதியில் முடிவுகளை எடுக்க முடியாது என்று தேசிய தலைமை முடிவு எடுத்துள்ளது. அவருக்கு கடைசி வாய்ப்பாக 10 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையிலேயே யோகியின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்’ என்றனர்.

 

 

The post பதவி நீக்கம் செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு; யோகியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 10 பேரவை தொகுதி இடைத்தேர்தல்: உ.பி மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் பாஜக தலைமை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: