ஒலிம்பிக் ட்ரிபிள் ஜம்பில் பங்கேற்கும் மன்னார்குடி விவசாயி மகன்

மன்னார்குடி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2 நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தடகளம், பாய்​மர படகு, துப்​பாக்​கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உட்பட இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தடகளம் ட்ரிபிள் ஜம்ப் (மும்முனை தாண்டுதல்) பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளம்வீரர் பிரவீன் சித்ரவேல்(22) தகுதி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரவீன் சித்ரவேல். இவர் சிறு வயது முதலே தடகளத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2018ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த ஜூனியர் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கல பதக்கத்தை பிரவீன் சித்ரவேல் வென்றார். 2023ம் ஆண்டு கஜகஸ்தானில் நடந்த போட்டியில் வெள்ளி பதக்கம், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் தற்போது நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். இவரது தேசிய சாதனை 17.37 மீட்டர் தூரமாகும். கடந்த ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 17.50 மீட்டர் தூரமே சாதனையாக இருந்து வருகிறது. இதனால் பிரவீன் சித்ரவேல் பதக்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post ஒலிம்பிக் ட்ரிபிள் ஜம்பில் பங்கேற்கும் மன்னார்குடி விவசாயி மகன் appeared first on Dinakaran.

Related Stories: