சென்னையில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் 16 இடங்களில் சுகாதார நடைபாதை: மாநகராட்சி ஏற்பாடு

 

சென்னை, ஜூலை 29: இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சென்னை சிட்டியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டிடங்களாக தென்படும் நிலை உள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் டிராபிக், எந்த பக்கம் பார்த்தாலும் பரபரப்பாக செல்லும் வாகனங்கள் என சென்னை நகரமே காலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்படும்.

இவ்வாறான வாழ்க்கை முறையில் இருக்கும் சென்னை வாசிகளும் உடல் நலத்தை பேணவும், சற்று இளைப்பாறவும் காலை, மாலை நேரங்களில் மாநகராட்சி பூங்காக்களுக்கு செல்வது, நடைபயிற்சி செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். இதேபோல், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் மக்கள் நடைபயிற்சி செய்கின்றனர். குறிப்பாக பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நடைபாதை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நடைபாதைகளில் செடி, கொடிகளுடன் பார்ப்பதற்கு இயற்கையான பசுமை சூழலில் நடைபயிற்சி செய்வது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் அமர்வதற்கும் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இதேபோன்று நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் சில முக்கிய சாலைகளை கண்டறிந்து அங்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

சென்னை டவுட்டன் ரித்தர்டன் சாலை, மகாகவி பாரதியார் நகரில் வெஸ்ட் ஆபிஸ், மீனாம்பாள் சாலை, சென்ட்ரல் அவின்யூ, வியாசர்பாடியில் சத்தியமூர்த்தி மெயின் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், நங்கநல்லூரில் 4, 5, 6, 48வது தெருக்களில் சுகாதார நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை போன்று 16 இடங்களில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்துகள் செல்லும் ரூட்களை தேர்வு செய்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ரூ.26 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள நடைபாதைகளில் அழகு செடிகள், செல்பி பாயின்ட்கள் போன்றவைகள் இடம்பெறும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2வது வாரத்தில் இந்த டெண்டர் இறுதி செய்யப்படும்” என்றனர்.

The post சென்னையில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் 16 இடங்களில் சுகாதார நடைபாதை: மாநகராட்சி ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: