வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனராக ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள்: சம உரிமை வழங்கி அழகு பார்க்கும் தமிழ்நாடு அரசு

சென்னை: பெண்கள் மட்டுமே அன்னையாகவும், மனைவியாகவும், மகளாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், ஆசிரியையாகவும் நம் வாழ்வில் ஏற்றம் தருபவர்களாக திகழ்ந்து வருகின்றனர். இப்படி, நம் அனைவரது வாழ்வில் நீக்கமற நினைவில் நிற்பவர்களாக பெண்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி மங்கையர் சாதிக்காத சாதனையும் உண்டோ இந்த பாரில் என்று கேள்வி எழுப்பும் விதமாக விண்ணிலும், மண்ணிலும் என அனைத்து துறைகளிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சாதனை மங்கையர்களாக திகழும் பெண்கள் பல்வேறு துறைகளிலும், சமூகம் மற்றும் குடும்ப பணிகளிலும் சாதித்து பெருமை கொள்ள வைக்கின்றனர். அதோடு பெண்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கல்வி, தொழில், அரசியல் என்று அனைத்திலும் சம உரிமை வழங்கி அழகு பார்த்து வருகிறது தமிழ்நாடு அரசு. அதன்படி பல சோதனைகளையும் கடந்து சாதனைகளை படைத்து மாவட்டங்களை ஆட்சி செய்து வரும் பெண் அதிகாரிகளை பார்க்கலாம்.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, டிஆர்ஓ மாலதி, ஆர்டிஓக்கள் கவிதா, சுபலட்சுமி, திட்ட இயக்குநர் ஆர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, துணை கமிஷனர் சசிகலா, உதவி கமிஷனர் ஜெபக்கிறிஷ்டோபர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆட்சி செய்து மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தை பெண் அதிகாரிகள் ஆட்சி செய்து வருகின்றனர்.

2 மாவட்டங்களில் 90 சதவீதம் பெண்களால் ஆட்சி செய்யப்படுவதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள், 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 9 தாலுகாக்கள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 21 பேரூராட்சிகள் ஆகியவை உள்ளன. தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள் (தஞ்சை, கும்பகோணம்) உள்ள மாவட்டம் தஞ்சாவூர்தான். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில் பெண்கள் பல்வேறு அரசு உயர் பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட 2வது பெண் கலெக்டர். இதே போல தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வல்லம் டிஎஸ்பி நித்யா, ஒரத்தநாடு ஏடிஎஸ்பி ஷஹானாஸ், ஆர்டிஓக்கள் இலக்கியா (தஞ்சை), பூர்ணிமா (கும்பகோணம்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) ஆகியோர் உள்ளனர். இதேபோல் நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம், வேளாண்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனராக ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள்: சம உரிமை வழங்கி அழகு பார்க்கும் தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: