திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் வழங்கினார்

*மக்களுடன் முதல்வர் முகாம்களில் மனு அளிக்க ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 38 பேருக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, வியாழக்கிழமையான நேற்று வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அதில், அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை சான்று வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவித்தொகை, உதவி உபரணங்கள், சான்றுகள் பெற பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த ேகாரிக்கை மனுக்களின் அடிப்படையில், நேற்று 38 பேருக்கு ஊன்றுகோல், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும், 74 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அதோடு, பஸ் பயண சலுகை அட்டை புதுப்பித்தல், காப்பீடு அட்டை போன்றவை வழங்கப்பட்டது. வழக்கம் போல, மாற்றுத்திறனாளிகளுக்கு மனுக்கள் எழுதி உதவி செய்ய, தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், கிராமப் பகுதிகளில் தற்போது நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் முகாமையும் ஒருங்கிணைத்து நடத்த கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, செங்கம் சே.நாச்சிப்பட்டு கிராமத்தில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வரும் 30ம் தேதி தண்டராம்பட்டு ஒன்றியம் சே.கூடலூர், 31ம் தேதி ஜமுனாமரத்தூர் ஒன்றியம் புலியூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.

மேலும், வரும் 1ம் தேதி வழக்கம் போல திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடைபெறும். பின்னர், வரும் 2ம் தேதி எறையூர், 6ம் தேதி காமக்கூர், 7ம் தேதி சந்தவாசல், 9ம் தேதி கிழக்குமேடு செவரப்பூண்டி, 13ம் தேதி கொழப்பலூர், 20ம் தேதி முள்ளண்டிபுரம், 21ம் தேதி மாங்கால் கூட்ரோடு, 23ம் தேதி கொருக்கை, 30ம் தேதி மேல்பாதி, செப்டம்பர் 3ம் தேதி குத்தனூர், 9ம் தேதி ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

The post திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: