திமுக ஆட்சியில் தான் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அதிக விடுதிகள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெருமிதம்

நெல்லை: ‘திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு அதிக விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது’ என நெல்லையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். நெல்லை அருகே கடம்பன்குளத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கடம்பன்குளம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், மாணவர்களின் வகுப்பறைகள், தேர்ச்சி சதவீதம், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அங்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிக முக்கியம், ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் கல்விதான் தீர்மானிக்கிறது. மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை செல்போன் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், தமிழக முதல்வர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திமுக ஆட்சியில்தான் ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு அதிகமான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது, பழைய கட்டிடங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ‘‘ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்படும். பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றார்.

The post திமுக ஆட்சியில் தான் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அதிக விடுதிகள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: