பட்டதாரி பெண்ணிடம் மர்ம கும்பல் ₹3 லட்சம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி

வேலூர், ஜூலை 26: வேலூரில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பட்டதாரி பெண்ணிடம் நூதன முறையில் மர்ம கும்பல் ₹3 லட்சம் மோசடி செய்து இருப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் தாலுக்காவை சேர்ந்த 27 வயதுடையவர் பட்டதாரி பெண். இவரை கடந்த மாதம் 27ம் தேதி அறிமுகம் தெரியாத நபர் யாரோ ஒருவர் வாட்ஸ்ஆப் குருப்பில் இணைத்து விட்டுள்ளார். அந்த குருப்பில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் கிடைத்ததாக அநேக நபர்கள் மெசேஜ் அனுப்பி இருந்துள்ளனர். இதை நம்பிய பட்டதாரி பெண் அந்த குரூப்பில் தொடர்பு கொள்ளச் சொன்ன ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர், அந்த நபர் அனுப்பிய லிங்கில் பதிவு செய்து இரண்டு தவணைகளில் மொத்தம் ₹3 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை பட்டதாரி பெண் முதலீடு செய்துள்ளார். பின்னர் லாபத்தோடு காட்டிய பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் கூடுதலான பணத்தை கட்டச் சொன்னதால் சந்தேகம் ஏற்பட்டது. உடேன இதுகுறித்து தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது முதலீடு என்ற பெயரில் பணத்தை ஏமாற்றி பறிப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனே சைபர் கிரைம் 1930 தொலைபேசி மூலம் புகாரை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோன்று பொதுமக்கள் யாரும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே பகுதி நேரம், முழு நேரம் வேலை போன்ற விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post பட்டதாரி பெண்ணிடம் மர்ம கும்பல் ₹3 லட்சம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி appeared first on Dinakaran.

Related Stories: