கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது : ஒன்றிய அரசு

டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ தெரிவித்தார். இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏன்?. திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது,”என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ,” எந்த ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் கோவை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது,” என்று விளக்கமளித்தார்.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மீண்டும் மீண்டும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு இதுவரை நிதி வழங்காமல் கால தாமதம் செய்வது ஏன் என்றும் கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர், 119 கிமீ தூரத்திற்கு சுமார் ரூ.63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு தமிழக அரசு முன்மொழிவை வழங்கி இருப்பதாகவும் இந்த அளவுக்கு உயர் செலவு கொண்ட திட்டத்திற்கான ஒப்புதல் என்பது திட்டத்திற்கான சாத்திய அறிக்கை மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் ஒப்புதல் என்பது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

The post கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: