நிதி வழங்குவதில் பாராபட்சம் கூட்டாட்சிக்கு சாவுமணி: ப.சிதம்பரம் விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடந்த ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசியதாவது: வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதி அமைச்சர் படித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்து பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து மேலும் பல யோசனைகளை எடுத்து பயன்படுத்த வலியுறுத்த முடியும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள யோசனைகளை மேலும் பயன்படுத்தினால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காப்பி அடிப்பது இந்த அவையில் தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல. அவை ஊக்குவிக்கப்படும், பாராட்டப்படும். நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம் ஆகும். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஜூன் மாத நிலவரப்படி 9%ஆக உள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசு செயல்படுத்திய உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை என தெரிகிறது.

வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்துடன் 5 அம்ச திட்டத்துக்கு 500 நிறுவனங்களை தேர்வு செய்தது பொருத்தமாக இல்லை. 2.9 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என நம்பிக்கை இல்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வெற்று அறிவிப்பு போல இந்த திட்டமும் இருந்து விடக் கூடாது.வேலையின்மை, பணவீக்க பிரச்னையை ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பணவீக்க பாதிப்பு பற்றி முறையாக அறியாததால்தான் 10 வார்த்தைகளில் நிதி அமைச்சர் பேசியுள்ளார்.

பணவீக்கத்தை இலகுவாகக் கருத வேண்டாம் .விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் என்பது அவ்வளவு அற்பமான விஷயமா? நீங்கள் பணவீக்கத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் இன்னும் அதிகமாக தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் கஷ்டப்பட விரும்பினால், தண்டனையை அனுபவிப்பது வரவேற்கத்தக்கது.
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா தொடர்ந்து பின்தங்கி உள்ளது.

81 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்குவது என்ற அரசு எடுத்த நடவடிக்கை, பசி குறியீட்டில் நாங்கள் மிகவும் குறைவாக உள்ளோம் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வது ஆகும். உங்கள் செயல், மக்களால் உணவு வாங்க முடியாது என்பதை காட்டுகிறது. நீங்கள் ஆந்திரா, அல்லது பீகாருக்கு நிவாரணம் வழங்குகிறீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை, ஆனால் மற்ற மாநிலங்களின் நிலை என்ன? நாம் ஒரு கூட்டாட்சி நாடு. மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து நிதி வழங்குவது கூட்டாட்சிக்கு அடித்த சாவுமணி. நீங்கள் இந்திய ஒன்றியம், நீங்கள் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களின் அரசும் நீங்கள் தான். நீங்கள் ஒரு மாநிலத்தைத் புறக்கணித்துவிட்டு, மற்றொரு மாநிலத்திற்கு நிவாரணம் வழங்க முடியாது என்றார்.

The post நிதி வழங்குவதில் பாராபட்சம் கூட்டாட்சிக்கு சாவுமணி: ப.சிதம்பரம் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: