முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சி சேர்க்கைக்கு கால அவகாசம் நீடிப்பு மண்டல இணைப்பதிவாளர் தகவல் வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்

வேலூர், ஜூலை 25: வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு பட்டயப்பிற்சி சேர்க்கைக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் செயல்படும் வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி 2024-25ம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி காலம் ஒரு வருடம். இப்பயிற்சி 2 பருவ முறைகள் கொண்டது. பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப் படிப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். 1-8-2024 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

கடந்த ஜூன் 10ம் தேதி முதல் ஜூலை 19ம் மாலை 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இணையவழியில் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்ப கட்டணம் ₹100 இணையவழி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மற்றும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் சுய ஒப்பமிட்டு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் மேலாண்மை நிலையத்திற்கு நேரில் வந்து உடனடி சேர்க்கை செய்து கொள்ளலாம். பயிற்சியாளர்கள் பயிற்சி கட்டணமாக ₹18,750 முழுவதும் ஒரே தவணையில் மேலாண்மை நிலையத்தில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சி சேர்க்கைக்கு கால அவகாசம் நீடிப்பு மண்டல இணைப்பதிவாளர் தகவல் வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: