இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்: ரூ.20.53 கோடி முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.20.53 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதையை மேம்படுத்துதல் மற்றும் பக்தர்கள் உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள், கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பரிகார மண்டபம் கட்டும் பணிகள், தூத்துக்குடி முத்தாரம்மன் கோயிலில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் ரூ.5.66 கோடி மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதி கட்டும் பணிகள், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் கட்டும் பணி மற்றும் திருவண்ணாமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, கன்னியாகுமரி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டும் பணி, விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விஸ்வநாதர் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் வாகன மண்டபம், மடப்பள்ளி, நூலகம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள், கரூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, நாமக்கல் அத்தனூரம்மன் கோயிலில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல, மயிலாடுதுறை பூம்புகார் கல்லூரியில் ரூ.3.99 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறை கட்டடங்கள், தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் ரூ.3.40 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டம் மற்றும் ரூ.1.16 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, பெரியகுளம் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் ரூ.3.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரூ.2.08 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சென்னை கொசப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயிலில் ரூ.1.55 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை, காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் ரூ.1.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை, விருதுநகர் மாயூரநாதசுவாமி கோயிலில் ரூ.94.50 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.94 லட்சம் செலவில் புதியதாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.87.20 லட்சம் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அடிப்படை வசதிகள், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ரூ.45 லட்சம் செலவில் நிர்வாக அலுவலர் குடியிருப்பு, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 35 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய குடில் என மொத்தம் 20.53 கோடி ரூபாய் செலவிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 159 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக கரூர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே. பரணிபால்ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்: ரூ.20.53 கோடி முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: