கெங்கவல்லி அருகே 20 ஆண்டுக்கு பின்பு அருட்காட்டம்மன் கோயில் விழா

*100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

கெங்கவல்லி : கெங்கவல்லி தாலுகா நடுவலூர் ஊராட்சியில் 500 ஆண்டு பழமையான காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் நடுவலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறு கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நடுவலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் அருங்காட்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெரியம்மன், சின்னம்மன் என இரு தெய்வங்கள் உள்ளன. அருங்காட்டம்மன் தேர் விழா காலங்களில் ஊர் நடுவில் உள்ள, காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயிலில், பெரியம்மன் -சின்னம்மன் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை வழக்கம். கடந்த 2004ம் ஆண்டு விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் திருவிழா தடைபட்டது.

விழாவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக கோயிலுக்குள் செல்லாமல், வெளியே வைக்கப்பட்டுள்ள பெரியம்மன், சின்னம்மன் சுவாமிகளை வழிபட்டு வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அருங்காட்டம்மன் கோயில் விழா நடத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது. அதன்பிறகு அறநிலைத்துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தாசில்தார் தலைமையில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்து விழா நடத்துவோம் என ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 19ம் தேதி விழா தொடங்கியது. காலம் காலமாக ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேள தாளத்துடன் குடும்பத்துடன் தேங்காய், பழத்தட்டுடன் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். இதனையொட்டி, கூடுதல் எஸ்பி அண்ணாதுரை தலைமையில், டிஎஸ்பிக்கள் சதீஷ்குமார், ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அருங்காட்டம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது, போலீசாருக்கும், ஒரு தரப்பை சேர்ந்த சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் இன்று நடைபெற இருக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். 20 ஆண்டுக்கு பின்பு திருவிழா நடைபெறுவதால், நடுவலூர் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவால் நடுவலூர் ஊராட்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post கெங்கவல்லி அருகே 20 ஆண்டுக்கு பின்பு அருட்காட்டம்மன் கோயில் விழா appeared first on Dinakaran.

Related Stories: