க.பரமத்தி : 44 வகையான திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்துள்ளது என அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ பேசினார்.க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கடைவீதி தனியார் திருமண மண்டபத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி வந்தவர்களை தென்னிலை மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதாகார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் நவீன்ராஜ், புகழூர் தாசில்தார் தனசேகரன், புகழூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு தலைமை வகித்து திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக, அனைத்துத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனுக்கள் பெறப்படுவதை நேரில் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில்,மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்தித்து தேவையானதை செய்து தர வேண்டும் என்பதற்கான இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை, தோட்டகலைத்துறை, காவல்த்துறை உள்ளிட்ட 15துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்று சேர்ந்து முகாமிட்டு 44 வகையான திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்துள்ளது.
இந்த திட்ட முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் 15தினங்களுக்குள் ஆய்வு செய்து தீர்வு காணப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து திட்டங்களும் நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தினை நமது தமிழக முதல்வர் கொண்டு வந்து மக்கள் நலனில் அக்கறையுள்ள சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார் இவ்வாறு பேசினார்.
முகாமில் தென்னிலை மேற்கு, தென்னிலைகிழக்கு, துக்காச்சி ஆகிய மூன்று வெவ்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன முகாமில் 15வகை துறை சார்ந்த அரசு அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள், முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு சேவைகளை கொண்டு செல்லும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்துள்ளது appeared first on Dinakaran.