இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஜனநாயகம் தான் நமது அரசியலமைப்பின் அடிப்படை தத்துவம். முடியாட்சி முறையை தவிர்த்து சிறப்பான நிர்வாக முறையை தந்துள்ளது. முடியாட்சியில் அதிகாரங்கள் அவர்களிடம் இருந்தது. ஆனால், ஜனநாயகம் அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரத்தை நேரடியாக தந்துள்ளது. தங்கள் பிரதிநிதியை மக்களால் நேரடியாக தேர்வு செய்ய முடியும். இது மக்களுக்காக மக்களால் அமைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் என்பதே பெருமைக்குரியது.
ஆனால், தேர்தல் முறையில் பணம், உணவு, பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பணமும், பரிசுப் பொருட்களும் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் ஜனநாயக முறை தோற்கடிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடியாட்சி முறையையே காட்டுகின்றன. இதுபோன்ற செயல்களின் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்போருக்கு ஓராண்டிற்கு குறையாத சிறைத் தண்டனையுடன், கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்கிறது.
போலீசார் தான் இதுபோன்ற வழக்குகளை முறையாக நடத்த வேண்டும். அவர்கள் இதுவரை யாருக்கும் தண்டனை பெற்று கொடுத்ததாக எந்த தகவலும் இல்லை. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தனிப்பட்டவர்களுக்கு எதிரானது அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானது. சமாதானமாக சென்றுவிட்டதால் வழக்கை ரத்து செய்யக் கோருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயக முறையில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது துடைத்தெறியப்பட வேண்டும். தேர்தலின் தூய்மையும், புனிதமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
குற்றம் செய்வோர் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்த வழக்கில் டிஜிபி ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் தரப்பில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019 மற்றும் 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2022ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டன? இதில், எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? இதில் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறித்து டிஜிபி தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29க்கு தள்ளி வைத்தார்.
* பணமும், பரிசுப் பொருட்களும் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் ஜனநாயக முறை தோற்கடிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடியாட்சி முறையையே காட்டுகின்றன. இதுபோன்ற செயல்களின் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
* வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்போருக்கு ஓராண்டிற்கு குறையாத சிறைத் தண்டனையுடன், கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்கிறது. போலீசார் தான் இதுபோன்ற வழக்குகளை முறையாக நடத்த வேண்டும்.
The post தேர்தலின் தூய்மை, புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? டிஜிபி அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.