தமிழக அரசு ஆணை வெளியீடு அதியமான்கோட்ட வளாகத்தில் நடுகற்கள் அகழ் வைப்பகம்

*பணிகள் விரைவில் தொடங்கும் என கலெக்டர் தகவல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை, வள்ளல் அதியமான் கோட்ட வளாக முன்புறத்தில் உள்ள 50 சென்ட் இடத்தில் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தின் வரலாறு கி.மு.5 ஆயிரம் (புதிய கற்காலம்) முதல் தொடங்குகிறது. பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள், சமுதாயத்தின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக நடுகற்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

அவ்வீரர்கள் அப்பகுதி மக்களை, கொடிய விலங்குகளிடம் இருந்தும், பிற பழங்குடியினரிடம் இருந்தும் காத்து வந்துள்ளனர். அவர்களுக்காக எழுப்பப்பட்டவை வீர நடுக்கற்கள் அல்லது நினைவு நடுகற்கள் எனப்படுகின்றன. தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அதிக அளவிலான நடுகற்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு நடுகல்லாவது காணப்படுகிறது. இந்த நடுகற்கள் கி.பி 5ம் நூற்றாண்டு முதல், கி.பி 17ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை சார்ந்தவையாகும்.

தர்மபுரி டவுன் பஸ் நிலையம் அருகே, தொல்லியல் துறையின் அகழ்வைப்பகம் உள்ளது. இங்கு நடுகற்கள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்கால பொருட்கள், கத்தி, குறுவாள், ஈமத் தொட்டிகள், தாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய ஜாடிகள், துர்க்கை மற்றும் சமண சமய, புத்த சமய சிற்பங்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள் மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப் பொருட்கள், செப்பு பொருட்கள், இரும்பு பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவை காட்சி பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வைப்பகத்தில் போதிய இடவசதி இல்லாமல், திறந்தவெளியில் நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளது. மழையிலும், வெயிலிலும் இந்த நடுகற்கள் பாதிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்த அகழ் வைப்பக அருங்காட்சியத்தில் தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக, 25க்கும் மேற்பட்ட நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழ்வைப்பகம், வீரக்கற்களின் அகழ்வைப்பகமாக திகழ்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டு, வரலாறுகளை தெரிந்து செல்கின்றனர். இந்த அருங்காட்சியத்தை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வரலாற்று மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அதியமான்கோட்டை வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில், 50 சென்ட் இடத்தில் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை வரலாற்று மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். தர்மபுரி அருங்காட்சியகத்தை, கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:

தமிழக அரசு, சட்டமன்றத்தில் 2022-2023ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், தர்மபுரியில் உள்ள அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கிணங்க, தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வந்து செல்லத்தக்க வகையில், நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு தொல்லியல் துறையின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் ஆய்வின் போது, குழு மற்றும் தர்மபுரி கலெக்டருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதில், வள்ளல் அதியமான் கோட்டத்தின் முன்புறத்தில் உள்ள இடத்தில் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து, அதியமான்கோட்டை வள்ளல் அதியமான் கோட்ட வளாக முன்புறத்தில் உள்ள 50 சென்ட் இடத்தில், நடுகற்கள் அகழ் வைப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நடுகற்கள் அகழ்வைப்பகம் அமையவுள்ள இடத்தில், நமது மாநிலம் மற்றும் மாவட்டத்தில் கிடைக்க பெற்ற அரும்பொருட்களை பேணி பாதுகாக்கும் வகையில், 2 அடுக்குகளாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, திட்ட அறிக்கை தயாரிக்க செயற்பொறியாளர் பாரம்பரிய (மரபு) கட்டிடக்கோட்டம், தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், பிஆர்ஓ மோகன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post தமிழக அரசு ஆணை வெளியீடு அதியமான்கோட்ட வளாகத்தில் நடுகற்கள் அகழ் வைப்பகம் appeared first on Dinakaran.

Related Stories: