மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் லோவ்லினா போர்கோஹெய்ன் களம் இறங்குகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற லோவ்லினா இந்த முறை 75 கிலோ பிரிவில் பங்கேற்கு தனது பதக்கத்தின் நிறத்தை மாற்றும் முனைப்பில் உள்ளார். உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள அவருக்கு பதக்கம் வெல்வது எளிதாக இருக்காது. 2020ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி, கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சீனாவைச் சேர்ந்த லி கியான், அகதிகள் குழுவைச் சேர்ந்த சிண்டி ங்கம்பா ஆகியோர் லோவ்லினாவுக்கு சவால் கொடுக்க காத்திருக்கின்றனர். மகளிர் குத்துச்சண்டையில் மேரி கோம் ஓய்வுக்கு பிறகு நிகத் ஜரீன் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான நிகத்ஜரீன் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக உள்ளார்.
50 கிலோ எடை பிரிவில் 2022, 23ம் ஆண்டில் 2 முறை உலக சாம்பியன் ஷிப்பில் தங்க பதக்கம் வென்றுள்ளார். பாரீசில் அவருக்கு பதக்கம் சாத்தியமானதாக இருந்தாலும் கடும் சவால் காத்திருக்கிறது. துருக்கியை சேர்ந்த பஸ் நாஸ் காகிரோக்லு,தாய்லாந்தின் சுதாமத் ரக்சத், கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சீனாவைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் வூயூ ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இவர்களை தவிர குத்துச்சண்டையில் 57 கிலோ எடை பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா, 54 கிலோ எடை பிரிவில் ப்ரீத்தி பவார், ஆடவர் 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கல், 71 கிலோ எடை பிரிவில் நிஷாந்த் தேவ்ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதனால் இந்த முறை குத்துச்சண்டையில் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
The post பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்பு எப்படி? நிகத் ஜரீன், லோவ்லினா மீது எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.