ஸ்ரீகாளஹஸ்தி திரவுபதி சமேத தர்மராஜர் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரவுபதி சமேத தர்மராஜர் கோயிலில் துரியோதனன் படுகளம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரவுபதி சமேத தர்மராஜர் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோயில் வளாகத்தில் துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வதம் குறித்து மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து, அதனை காலையில் நாடகக் கலைஞர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் (கிருஷ்ணர், அர்ஜுனன், திரவுபதி) கோயிலில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி நகரின் முக்கிய தெருக்களான ஜெயராம் ராவ் வீதி, பஜார் வீதி, தேர் வீதி, நகரி வீதி, நேரு வீதி, வழியாக தர்மராஜர் கோயில் வரை ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் சேவல் மற்றும் ஆடு கோழி பலி கொடுத்ததோடு பொங்கல் இட்டும் மா விளக்குகள் ஏற்றி திரவுபதி சமேத தர்மராஜர், பீமன், அர்ச்சுனன், நகுல – சகாதேவன் சுவாமிகளை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் மாலையில் தீ மிதி விழாவிற்காக கோயில் வளாகத்தில் சிவன் கோயில் செயல் அலுவலர் மூர்த்தி முன்னிலையில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு தீ மேடையை ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து, மாலை 6 மணி முதல் காளஹஸ்தி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விரதம் இருந்த ஆயிரக் கணக்கானோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீகாளஹஸ்தி திரவுபதி சமேத தர்மராஜர் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: