ஊட்டியில் ஆவின் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிப்பு

*உயிரிழப்பு ஏற்படும் முன்பு சீரமைக்க கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தை பிற சமவெளி பகுதி மாவட்டங்களுடனும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூர் – ஊட்டி – மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.பெருகி வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு இச்சாலையில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால்கள், தடுப்புசுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊட்டி நகருக்குள் தலையாட்டி மந்து, ஆவின் நிறுவனம் அருகே, சேரிங்கிராஸ் உட்பட 5 இடங்களில் மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி கான்கீரிட் வடிகால்வாய்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இப்பணிகளை பருவமழைக்கு முன்பு துவக்க முடிவு கடந்த மே மாதம் எவ்வித முன் அறிவிப்புமின்றி ஆவின் அருகே சாலை நடுவே பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் கோடை சீசன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பணிகளை நிறுத்தினர். இந்நிலையில் சீசன் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிய நிலையில் நிலத்தடி கான்கீரிட் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஆவின் அருகே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனை அறியாமல் வரும் வாகனங்கள் பள்ளத்தில் வேகமாக இறங்குவதால் அவை பழுதடைகின்றன.

பள்ளம் இருப்பது தொியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவறி விழுகின்றனர். பள்ளம் இருப்பதால் ஊட்டி நோக்கி வரும் வாகனங்கள் வலது புறமாக வந்து செல்கின்றன. இதன் காரணமாக ஒேர சமயத்தில் இரு மார்க்கமாகவும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து விசாரித்த போது மே மாதத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பணிகளை நிறுத்திய காவல்துறை, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தது.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை வேண்டுமென்ற பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே சாலையில் உள்ள பள்ளத்தால் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு நிலத்தடி கான்கீரிட் கால்வாய் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டியில் ஆவின் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: