இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இனி வரும் நாட்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று சட்டசபை விதிகள் குழுவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது.

மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார். தமிழக சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலைஞர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, திமுக ஆட்சியில் மீண்டும் பழைய நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: