மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் கால்வாய் அமைப்பதில் இரு தரப்பினர் பேச்சு வார்த்தையில் கூச்சல் குழப்பம்: கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக இருதரப்பினர் பேச்சு வார்த்தையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால், ஒரு தரப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நடராஜன், துணைத் தலைவரின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, மழை நீர் வடி கால்வாய்கள் அமைத்ததில் பல லட்சம் ஊழல் செய்திருப்பதாக கூறி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனவர்களின் ஒரு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி பாஸ்கர் ராவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஊராட்சி துணைத் தலைவர் ராஜாத்தி வெங்கடேசன் மற்றும் 7 குடும்பத்தினரை மீனவ பஞ்சாயத்தார் தண்டோரா போட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, உடனடியாக ஒதுக்கி வைத்ததை தண்டோரா போட்டு அனைவரது முன்னிலையிலும் அறிவிக்க வேண்டும் என துணைத் தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தினர் கூறினர். இதற்கு, மற்றொரு தரப்பினர் ஏற்கனவே தண்டோரா போட்டு விடுவித்து விட்டதாக கூறி, அதற்கான வீடியோ ஆதாரங்களை அதிகாரிகளிடம் காட்டினர்.

அப்போது, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திடீரென அதிகாரி முன்னிலையில் அங்குள்ள கோயில் சுவரை ஓங்கி அடித்து, மீண்டும் தண்டோரா போட்டு அனைவரது முன்னிலையிலும் ஊர் கட்டுப்பாடு விலக்கப்பட்டதாக அறிக்க வேண்டும் என கூறினார். இதனை, ஏற்க மறுத்து மற்றொரு தரப்பினர் அவரை அடிப்பது போல் பாய்ந்ததால் போலீசார் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, சிறிது பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படும் துணைத் தலைவர் தரப்பினர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து புறக்கணித்து வெளியேறினர்.

தொடர்ந்து, மீனவ பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். இனி, இரு தரப்புக்கும் இடையே எந்த பிரச்னையும் ஏற்படாது. அவர்கள், வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்கவும், மற்ற வேலைகளுக்கும் செல்லலாம். வரும், வாரத்தில் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. அவர்களும், கலந்து கொண்டு கூழ் ஊற்றி சாமியை வழிபடலாம் என தெரிவித்தனர். பின்னர், காவல் துறை சார்பில் இனி பிரச்னைகள் குறித்து புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால், அங்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

 

The post மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் கால்வாய் அமைப்பதில் இரு தரப்பினர் பேச்சு வார்த்தையில் கூச்சல் குழப்பம்: கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: