விமானத்தில் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் ராம்ப் டிராக்டர்களை இயக்குதல் போன்றவையும் இந்த பணியில் அடங்கும். இதற்காக மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அடிப்படை கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு அல்லது பிளஸ் டூ படிப்பு போதுமானது. உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா அறிவித்திருந்தது. இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு கடந்த மும்பை விமான நிலையம் கேட் எண்.5 அருகேயுள்ள சாகர் கார்கோ காம்ப்ளக்சில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை அறிந்த இளைஞர்கள் 25,000க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்திற்கு அருகே குவிந்தனர்.
எம்.காம், பிபிஏ, பிஏ போன்ற பட்டப்படிப்புகளை படித்துவிட்டு கையில் சான்றிதழ்களுடன் வந்திருந்த இளைஞர்கள், ஒருவரையொருவர் முண்டியடித்துச் சென்றனர். பல இளைஞர்கள் உணவு, தண்ணீர் இன்றி மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர். அவர்களில் பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஏர் இந்தியா ஊழியர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சிரமப்பட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு கிளம்புமாறு கூறி இளைஞர்களை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ஏவியேஷன் இண்டஸ்டிரி அமைப்பின் பொதுச்செயலாளர் ஜார்ஜ் ஆப்ரகாம் கூறுகையில், ‘ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. 1 கி.மீட்டருக்கு மேல் நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்துக் கிடந்தனர். இதனால் வேறுவழியின்றி போலீசாரை அழைக்க வேண்டியிருந்தது. பின்னர், இளைஞர்கள் தங்களது சுயவிபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டோம். இதனால் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் 200 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்த புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதமேஷ்வர் கூறுகையில், ‘நேர்முகத்தேர்வுக்காக 400 கிமீ பயணம் செய்து வந்துள்ளேன். நான் பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். இந்த வேலைக்கு ரூ.22,500 சம்பளம் தருகிறார்கள். வேலை கிடைத்தால் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு வந்துவிடுவேன். அந்த அளவுக்கு தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்க அரசை வலியுறுத்துகிறேன்’ என்றார்.
மற்றொரு இளைஞர் கூறுகையில், ‘நான் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளேன். எம்.காம் படித்து முடித்துவிட்டு அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். எடுபிடி வேலை என்றாலும் ஏர் இந்தியா அறிவித்த வேலைக்காக இங்கு வந்தேன். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்களை வெளியேற சொல்லிவிட்டார்கள்’ என்று ஏமாற்றத்துடன் கூறினார். இது வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சம் என எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். நாட்டில் சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
* 3 ஆண்டு ஒப்பந்த பணி
விமான நிலையத்தில் பராமரிப்பு உள்ளிட்ட எடுபிடி வேலைக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் டூ படித்திருந்தால் போதுமானது என்பது மட்டுமல்ல, இந்த பணி 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. ஒப்பந்த வேலை என்ற போதிலும் பட்டதாரி இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
The post வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சம் மும்பை ஏர்போர்ட் எடுபிடி வேலைக்கு குவிந்த 25,000 பட்டதாரிகள் appeared first on Dinakaran.