இடைப்பாடி, ஜூலை 17: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 1700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டதும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கோஷ்டி மோதலாக மாறியது. இதில், தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர், அங்கிருந்த தலைமை ஆசிரியர் பால்ராஜ், துணை தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோரிடம் தங்களது குழந்தைகள் தாக்கப்பட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர், பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், இடைப்பாடி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
The post பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் appeared first on Dinakaran.