ஜோலார்பேட்டை: நாட்றம்பள்ளி அருகே 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாடோடி மனிதர்கள் பயன்படுத்திய பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரிமேடு என்ற பகுதியில் முத்தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 20க்கும் மேற்பட்ட பழைய கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கற்கால கருவிகள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
இந்த கற்கருவிகளானது வெவ்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளன. முற்காலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன் உணவுப் பொருட்களை கிழிக்கவும், வெட்டவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் இயற்கையாக கிடைக்கும் கற்களை உடைத்து, அவற்றில் கூர்மையானவற்றை ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த வரலாற்று தடயங்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி மேடு என்ற பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் மகிழ்ச்சியும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இப்பகுதியில் 10 ஆயிரம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரையிலான பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு இக்கருவிகள் தக்க சான்றுகளாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post நாட்றம்பள்ளி அருகே கத்தாரிமேடு பகுதியில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டெடுப்பு: நாடோடி மனிதர்கள் பயன்படுத்தியது appeared first on Dinakaran.