தமிழக எல்லையோர மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலி, பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன. எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பூச்சியில் நிபுணர்களுடன் இணைந்து டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க மக்கள் பயன்படுத்தும் நீரில் குளோரினேஷனை உறுதிசெய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் ஏடிஸ் கொசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் பிரத்யேக காய்ச்சல் வார்டு உருவாக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையாக மருந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழக எல்லையோர மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலி, பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: