இந்த வார விசேஷங்கள்

பெரியாழ்வார் திருநட்சத்திரம்
15.7.2024 – திங்கள்

பெரியாழ்வார் பனிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர். எப்பொழுதும் பகவானையே நினைப்பதால், ‘விஷ் ணு சித்தர்’ என்பது பெயர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார். அவர் இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். 1. திருப்பல்லாண்டு 2. பெரியாழ்வார் திருமொழி. அவருடைய அவதார வைபவம் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் இன்று நடைபெறும்.

ஆடி பண்டிகை
17.7.2024 – புதன்

ஆடிமாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் சூரியன், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களுக்குத் தென்திசையில் பயணிக்கிறார். எனவே இது தட்சிணாயன காலமாகும். ஆடி மாதம் தேவர்களின் இரவு காலத்தின் தொடக்கம் என்பார்கள். பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலம் என்பதால், வழிப்பாட்டில் சிறப்பான இடத்தைப் பெற்ற மாதம்.

திருவெள்ளறை, திருக்குடந்தை முதலிய சில வைணவத் தலங்களில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒவ்வொரு வாசல் வழியே பெருமாளைச் சேவிக்கும் வழக்கமுண்டு. இதை தட்சிணாயன வாசல், உத்தராயண வாசல் என்று சொல்வார்கள். ஆடி மாதம் ஒன்றாம் தேதி வடக்கு பக்கம் உள்ள உத்தராயண வாசலை மூடிவிட்டு சுவாமி தரிசனத்திற்காக தட்சிணாயன வாசலைத் திறந்து வைப்பார்கள். ஆடி மாதம் முதல் நாள் மாலை இந்த வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்வது மிகப் பெரிய சிறப்பு.மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

“ஆடி செவ்வாய் தேடிக்குளி” என்பார்கள். ஆடியில், செவ்வாய்க் கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப் பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை கடைப் பிடிப்பார்கள்.ஆடி மாத வளர்பிறை பஞ்சமி, நாக பஞ்சமியாகவும், கருட பஞ்சமியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் நாகதோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாகபிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். மறுநாள் பட்சிராஜன் கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆடி மாதப் பிறப்பன்று செய்ய வேண்டியவை

ஆடி மாத பிறப்பன்று வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் நீர் தெளித்து பெரிய கோலமாக போட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து, மங்கள விளக்குகளை ஏற்ற வேண்டும். வண்ண மலர்களை பகவானுக்கு சூட்டி, பல நிவேதனங்களை படைத்து பூஜை செய்ய வேண்டும். ஆடிப் பால் என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது, தேங்காய்ப்பாலை ஆடிப் பால் என்பார்கள். காரணம், தேங்காயை உடைத்து அதை உரலில் இட்டு ஆட்டி எடுப்பதால் அதற்கு ஆடிப்பால் என்று பெயர். பித்தத்தை குறைக்கும் சக்தி உண்டு. அதை வெல்லம் சேர்த்து பெருமாளுக்குப் படைப்பார்கள். புதுமண தம்பதிகளுக்கு இந்த பாலை கொடுக்கக் கூடிய வைபவமும் ஆடி மாதத்தில் பல குடும்பங்களில் நடக்கும்.

புதானுராதா
17.7.2024 – புதன்

சில குறிப்பிட்ட நாளும் திதியும் இணைந்து வருவதை புனித விரத வழிப்பாட்டுக்குரிய நாளாக பெரியவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ அந்த சிறப்பான நாட்கள் அமையும். அப்படி ஒரு நாள்தான் “புதானுராதா’’. புதன்கிழமையும், அனுஷம் நட்சத்திரமும் இணைத்து வரும் தினம், புதானுராதா தினம். இந்த நாள், வழிபாடு அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும். அறிவாற்றலை அதிகரிக்கும். உறவில் ஏற்படும் சிக்கல்களைப் போக்கி நட்புறவு வளர்க்கும். பெருமாளையும் நவக்கிரகங்களில் சனிபகவானையும், வழிபட நலம் பல சிறக்கும். ஜாதக பொருத்தம் இல்லாமல் நடைபெற்றிருந்தால் அவர்களுக்கு விரைவில் மணமுறிவு ஏற்படுமோ…! என அஞ்சுகிறோம். புதன்கிழமையும், அனுச நட்சத்திரம் கூடிய நாட்களில் இவர்களுக்கு மீண்டும் சுவாமி படம் முன் மாங்கல்ய கயிறு மாற்றாச் செய்தால், இவர்களிடையே மறைமுகமாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று, மனமொத்த தம்பதிகளாகவும், அனைத்து சம்பத்துகளையும் பெற்று நீடூழி வாழ்வார்கள் என்றும் ஒரு கருத்து ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது.

சர்வ நதி ரஜஸ்வலை
17.7.2024 – புதன்

ஆடி மாதம் முதல் தேதி பஞ்சாங்கத்தில் நதி ரஜஸ்வலை மூன்று நாட்கள் என்று போட்டிருப்பதை காணலாம். நதிகளை பெண்களாக கருதுவது இந்திய மரபு. ஆடி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து முதல் மூன்று நாட்கள் நதிகளுக்கு தீட்டு ஏற்படுகிறது என்கிறது சாஸ்திரம். எனவே, ஆடி முதல் மூன்று நாட்கள் புண்ணிய நதிகளான காவிரி, தாமிரபரணி, நர்மதா முதலிய நதிகளிலும், கிளை நதிகளிலும் நீராடுவதை தவிர்க்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய விரதம்
18.7.2024 – வியாழன்

இன்று திங்கட்கிழமை. பல விசேஷங்கள் அடங்கிய நாள். வருடத்தில் நான்கு மாதங்கள் சன்னியாசிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சாதுர்மாஸ்ய விரதம், இன்று தொடங்குகிறது. சாதூர்மாஸ்யம் என்றால் நான்கு மாதங்கள். ஆஷாட மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி, அடுத்து வரும் ச்ரவண, பாத்ரபத, ஆச்வின மாதங்களிலும் விரதம் அனுஷ்டித்து, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரதத்தை சந்நியாசிகள் நிறைவு செய்வார்கள். இந்த நான்கு மாதங்களிலும் அவர்கள் வேறெங்கும் சஞ்சரிக்காமல் ஒரே இடத்தில் தங்கிவிடுவார்கள். சாதுர்மாஸ்ய சன்னியாசிகளை வணங்குவதன் மூலமாக, பல நன்மைகள் கிடைக்கும். தோஷங்கள் விலகும்.

பிரதோஷம்
சகல சிவாலயங்களிலும்
ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு
அபிஷேகம்
19.7.2024 – வெள்ளி

இன்றைய தினம், வெள்ளிக் கிழமை மகாலட்சுமிக்குரிய நாள் சுக்ர வார பிரதோஷ நாளாகவும் அமைந்திருக்கிறது. பிரதோஷ நாளில், சிவ ஆலயங்களில் மாலை வேலைகளில் நந்தி தேவருக்கும் அபிஷேம் நடைபெறும் வேளையில், சிவதரிசனம் செய்வது நல்லது. ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், பிரதோஷம் அன்று சிவன் கோயில் களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் நல்லது.

ஆடி முதல் வெள்ளி
19.7.2024

ஆடி மாதம் வழிபாட்டுக்கு, அதுவும் பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரிய சிறந்த மாதம். அதிலும் ஆடி வெள்ளிக் கிழமை மிகமிக விசேஷம். சந்திரனும் மகாலட்சுமியும் பாற்கடலில் தோன்றியவர்கள். சந்திர சகோதரி என்று மகாலட்சுமியைச் சொல்வார்கள். சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசிக்கு உரிய மாதம்தான் ஆடி மாதம். சந்திரன் உச்சம் பெறுகின்ற ரிஷப ராசிக்கு உரிய சுக்கிரன்தான் வெள்ளிக் கிழமைக்கு உரியவர். எனவே, ஆடி மாதம் வெள்ளிக் கிழமை என்பது மகாலட்சுமியின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகின்ற நாள். அதிலும், முதல் வெள்ளி மிக விசேஷம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை “சுக்கிர வார விரதம்’’ என்று கூறுவர். ஆடி வெள்ளிக் கிழமை விரதம் இருப்பதால், கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். அத்துடன் கடன் பிரச்னைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணத் தடை நீங்கி, மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். அன்று அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கும். உற்சவருக்கு மாலை நேரத்தில் கண்ணாடி அறை சேவை நடைபெறும். பிரகார புறப்பாடு நடந்து தாயாருக்கும் பெருமாளுக்கும் மாலை மாற்றுதல் நடைபெறும்.

13.7.2024 – சனி – கள்ளழகர் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம்.
13.7.2024 – சனி – குச்சனூர் சனி ஆராதனை.
14.7.2024 – ஞாயிறு – ராமநாதபுரம் கோதண்ட ராமர் தேர் மறுநாள் தீர்த்தவாரி இரவு சிம்ம வாகனம்.
14.7.2024 – ஞாயிறு – திருவள்ளூர் கேஷ்டாபிஷேகம்.
15.7.2024 – திங்கள் – ஆனி சுவாதி மாம்பலம் ஸ்ரீநரசிம்மர் கருடசேவை.
16.7.2024 – செவ்வாய் – கள்ளழகர் கருட வாகன சேவை.
17.7.2024 – புதன் – கள்ளழகர் ராஜாங்க சேவை.
17.7.2024 – புதன் – சர்வ ஏகாதசி.
17.7.2024 – புதன் – ருத்ராபிஷேகம்.
18.7.2024 – வியாழன் – முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.
18.7.2024 – வியாழன் – வாசுதேவ துவாதசி.
19.7.2024 – வெள்ளி – சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தேரோட்டம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: