திருமலை : என்னை சந்திக்க வரும்போது பூங்கொத்து, பட்டு சால்வைகள், நினைவு பரிசுகள் கொடுப்பதற்கு பதிலாக காய்கறி, பழங்கள் கொடுத்தால் போதும் என ஆந்திர துணைமுதல்வர் கேட்டுக்கொண்டார்.ஆந்திர மாநில துணைமுதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன்கல்யாணை தினமும் ஏராளமான எம்பி, எம்எல்ஏக்கள், சினிமா துறையினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். அவரை சந்திக்க வரும்போது பெரும்பாலானோர் பூங்கொத்து, உயர்தர பட்டு சால்வைகள், சுவாமி சிலைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றை நினைவு பரிசுகளாக வழங்கி வாழ்த்துகின்றனர். இதேபோல் நேற்றுமுன்தினம் தன்னை சந்திக்க வந்த கட்சியினர் ஏராளமான பரிசு பொருட்களுடன் வந்தனர்.
அவற்றை பெற்றுக்கொண்ட பவன்கல்யாண் பேசுகையில், `என்னை சந்திக்க வரும்போது பலர் பலவிதமான விலைமதிப்பற்ற பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். அனைவரின் அன்புக்கும் நன்றி. ஆனால் அவற்றை உங்களிடம் வாங்கி அடுத்த நொடியே எனது உதவியாளரிடம் கொடுத்துவிடுகிறேனே தவிர, அவற்றை வைத்து என்ன செய்வது என தெரியவில்லை. குறிப்பாக சுவாமி படங்கள், அலங்கார பொருட்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பரிசு பொருட்களை தருகிறீர்கள். இவற்றை கண்ட இடத்தில் வைத்துவிட முடியாது. அவ்வாறு செய்தால், அதை கொடுத்தவர்களை இழிவுபடுத்துவது போன்று ஆகிவிடும். எனவே அனைவரிடமும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இனி, என்னை சந்திக்க வரும் அனைவரும் பெரும்பாலும் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவற்றை மாநிலத்தில் விரைவில் தொடங்க இருக்கும் மலிவு விலை உணவகமான `அண்ணா கேண்டீன்’ மற்றும் அனாதை இல்லங்களுக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும். இதன்மூலம் அங்கு அனைவரும் திருப்தியாக சாப்பிடுவார்கள். கொடுத்த உங்களுக்கும், அதனை பெற்ற எனக்கும் என இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். எனவே இதனை அனைவரும் தவறாமல் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு பேசினார். இதனை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
The post ‘அண்ணா கேண்டீனுக்கு தர உதவியாக இருக்கும்’ என்னை சந்திக்க வரும்போது காய்கறி, பழங்கள் கொடுங்கள் appeared first on Dinakaran.