விழுப்புரம், ஜூலை 13: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைதேர்தல் வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேசியஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுயேட்சைகள் என 29 பேர் போட்டியிட்டனர்.
தொடர்ந்து 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 82.48% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் சீல்வைத்தார். தொடர்ந்து துணைராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட உள்ளது. முன்னதாக தபால் ஓட்டுபெட்டி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு எண்ணப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணிமுடிக்கப்படுகிறது. காலை 11 மணியளவில் இடைதேர்தல் வெற்றிநிலவரம் தெரிந்துவிடும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் என்று பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் கூறினார்கள். இதனால் இடைத்தேர்தல் முடிவை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
அதேசமயம் அதிமுக, தேமுதிக இடைத்தேர்தலை புறக்கணித்ததால் குறைந்த வாக்குசதவீதம் பதிவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 82.48சதவீதம் பதிவாகியிருந்தன. இது ஆளுங்கட்சிக்கு சாதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் பழனி கூறுகையில், வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 சுற்றுகளாக வாக்குஎண்ணிக்கை நடைபெறஉள்ளது. மேலும் தபால் வாக்குகளுக்கு 2 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டு ஒரே சுற்றாக நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளும் விதமாக சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக 150 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.
The post 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக எண்ணி முடிவுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.