தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை குறைக்க நடவடிக்கை: அதிகாரிகள், போலீசாருடன் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆலோசனை

தாம்பரம்: பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையில் தினமும் காலை முதல் இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் பெரிய வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு அவகாசம் கொடுத்து, சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை ஒரு தலைப்பட்சமாக அகற்றினர். ஆனாலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலை, தாம்பரம் காந்தி சாலை என சுற்றுவட்ட பகுதி சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கை குறித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார், மண்டல குழு தலைவர் டி.காமராஜ், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன், ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தாம்பரம் பேருந்து நிலையம் ஜிஎஸ்டி சாலையில் பெருமளவு ஆக்கிரமிப்பு உள்ளதால் தினமும் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும், நெரிசலை குறைக்க தாம்பரம் பேருந்து நிலையத்தை சிறிது சுருக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஜிஎஸ்டி சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாகவும் பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடும் பேருந்துகள் சாலையின் நடுவே நிறுத்தி இறக்கிவிடாமல் பேருந்து நிலையத்துக்குள் சென்று இறக்கிவிடும் பட்சத்தில் நெரிசல் குறையும் எனவும், பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பேருந்து நிலையம் அருகே 3 முதல் 4 வரிசையாக ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து பேருந்துகள் நிறுத்துவதை கட்டுப்படுத்தினால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

இவ்வாறு சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடுமா, அவ்வாறு செய்யும் பணிகளுக்கு எவ்வளவு நாட்களாகும், பேருந்து நிலையத்தை சுருக்கி மாற்றி அமைப்பதற்கு செலவு எவ்வளவு ஆகும். பேருந்து நிலையத்தை சுருக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமா? என எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அதிகாரிகளிடம் கேள்விகளை முன்வைத்தார். பின்னர், போக்குவரத்து நெரிசலை எப்படியாவது குறைக்கவேண்டும். அதே சமயத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

 

The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை குறைக்க நடவடிக்கை: அதிகாரிகள், போலீசாருடன் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: