கெங்கவல்லி அருகே கர்ப்பிணி பெண் மர்மச்சாவு

*போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகை

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே, கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில், வரதட்சணை கேட்டு அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே சின்னபுனல்வாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல் மகன் பிரதிஷ்குமார்(30). பிஇ பட்டதாரியான இவர், பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி வேல் என்பவரது மகள் கவியரசி (25) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 1ம் தேதி, பெங்களூருவில் இருந்து வந்த பிரதிஷ்குமார், மாமனார் வீட்டில் இருந்த கவியரசுவை, தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கவியரசி கணவரிடம் கோபித்துக்கொண்டு, இரவு சாப்பிடாமல் தனது அறையில் உறங்க சென்றார்.

நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த பிரதிஷ்குமார், ஜன்னல் கண்ணாடியை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, கவியரசி தனது சேலையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) காந்திமதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தகவலறிந்து வந்த கவியரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

மருமகன் பிரதிஷ்குமாரை பிடித்து, மகளை கொன்று விட்டாயா? என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் கவியரசியின் சடலத்தை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கவியரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தகவலின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து, கவியரசியின் தாய் அருந்ததி புகார் அளித்தார். அதில், எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்த, மருமகன் பிரதிஷ்குமார், அவரது தாயார் தங்கமணி, தங்கை பிரதீபா ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். பின்னர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள், பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆத்தூர் டவுன், ரூரல் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 50க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆத்தூர் கோட்டாட்சியர் விசாரணை செய்வார் என்றார். அவர் அளிக்கும் பரிந்துரை பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி சதீஷ்குமார் கூறினார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின், கவியரசி சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் (பொ) அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனைக்கு பின், கவியரசி சடலத்தை, பெற்றோர்கள் வாங்கி சென்றனர்.

The post கெங்கவல்லி அருகே கர்ப்பிணி பெண் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Related Stories: