ஜேஇஇ தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்: 60 ஆண்டுகளில் முதல்முறையாக 6 மாணவர்கள் திருச்சி என்ஐடியில் சேர்ந்து சாதனை

சென்னை: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக பழங்குடியின மாணவிகள் 5 பேர் உள்பட 6 பேர் திருச்சி என்ஐடியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பிரதேசத்தில், மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரியகோயில் வேலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதி பூச்சான்-ராஜம்மாள் ஆகியோரின் மகள் சுகன்யா(17). 13 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜம்மாள் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தையடுத்து, பெரியம்மா சின்னபொண்ணு பராமரிப்பில் வசிக்கின்றனர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா, கரியகோயில் கிராமத்தில் உள்ள உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 வரை படித்து, ஏத்தாப்பூரில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட இலவச நுழைவுத் தேர்விற்கான பயிற்சியில் கலந்து கொண்டார். பின்னர், சேலத்திற்கு சென்று ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதினார். இதில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவி சுகன்யா கூறுகையில், ‘என்னை கடந்த 13 ஆண்டுகளாக வளர்த்த எனது பெரியம்மா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஏத்தாப்பூரில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில், தமிழ்நாடு அரசு அளித்த ஒரு மாத பயிற்சி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளதற்கு காரணமான தமிழ்நாடு முதல்வருக்கு எனது வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்,’ என்றார். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் பயில்வதற்காக அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் பிளஸ்2 முடித்த மாணவி ரோகினி (17), சமீபத்தில் ஜேஇஇ போட்டி தேர்வில் கலந்து கொண்டார். தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், ரோகினி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதனால் அவர் திருச்சி என்ஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்து பயில தேர்வாகி உள்ளார். இதுபற்றி மாணவி ரோகிணி கூறுகையில், தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. எங்கள் பள்ளியில் நடத்திய பாடப்பிரிவுகளையே நான் பயின்றேன். அதுமட்டுமின்றி எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். நான் என்ஐடியில் தேர்வாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ரோகினியின் தந்தை மதியழகன். கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது தாய் வசந்தி. பச்சைமலையில் விவசாயம் செய்து வருகிறார். அதேபோல் தமிழக அளவில் தரவரிசையில் 302வது இடம் பிடித்த திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்த கவினி என்ற மாணவி கட்டிடக்கலை பிரிவில் படிக்கவும், மாநில அளவில் 2538 தர வரிசை பெற்ற முத்தரசநல்லூரை சேர்ந்த மாணவி ரித்திகா கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கும், தமிழக அளவில் 7,106 தரவரிசை பெற்ற பூலாங்குடியை சேர்ந்த மாணவி திவ்யாபிரீதா தயாரிப்பு பொறியியல் பிரிவில் சேர்வதற்கும், தமிழக அளவில் 8,872 தரவரிசை பெற்ற கைலாசபுரத்தை சேர்ந்த தனுஷ் ராஜ்குமார் பங்காரு தயாரிப்பு பொறியியல் பட்டம் படிப்பதற்கும் திருச்சி என்ஐடி கல்லூரியில் பதிவு செய்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக பழங்குடியின மாணவர்கள் 6 பேர் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜேஇஇ தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்: 60 ஆண்டுகளில் முதல்முறையாக 6 மாணவர்கள் திருச்சி என்ஐடியில் சேர்ந்து சாதனை appeared first on Dinakaran.

Related Stories: