3வது டி20ல் அபார வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க மகளிர் அணி பெங்களூருவில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி மண்ணைக் கவ்வியது. அடுத்து இரு அணிகளும் சென்னையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. 2வது போட்டியில் அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச… தென் ஆப்ரிக்கா 17.1 ஓவரில் 84 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

பிரிட்ஸ் 20, காப் 10, போஷ் 17 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் (3.1-0-13-4), ராதா 3 விக்கெட் (3-1-6-3), அருந்ததி, ஷ்ரேயங்கா, தீப்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 27 ரன் (25 பந்து, 3 பவுண்டரி), ஸ்மிரிதி மந்தனா 54 ரன்னுடன் (40 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

* விம்பிள்டன் அரையிறுதியில் டோனா வேகிச்
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, குரோஷிய வீராங்கனை டோனா வேகிச் தகுதி பெற்றார். காலிறுதியில் நியூசிலாந்தின் லூலூ சுன் (23 வயது, 123வது ரேங்க்) உடன் நேற்று மோதிய டோனா வேகிச் (28 வயது, 37வது ரேங்க்) 5-7 என முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய அவர் 6-4, 6-1 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

* கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் குரோஷியாவின் மேட் பாவிச் – கிச்சனோக் (உக்ரைன்) ஜோடி 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் சார்லஸ் புரூம் – எமிலி ஆப்பிள்டன் இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

The post 3வது டி20ல் அபார வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: