60 லட்சம் மரங்கள் மாயம்: ஒன்றிய, மாநில அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா தெலங்கானா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 6 மில்லியன்(60 லட்சம்) மரங்கள் காணாமல் போன விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, உறுப்பினர்கள் அருண் குமார் தியாகி மற்றும் ஏ.செந்தில்வேல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதாக தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post 60 லட்சம் மரங்கள் மாயம்: ஒன்றிய, மாநில அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: