சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 3 அணிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை இப்போது இருந்தே தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இக்குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஒருங்கிணைப்பு குழு இதுவரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி, திமுக சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணியினருடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஐவர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று மருத்துவர் அணி, மீனவர் அணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த குழுவினர் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்சிப்பணி-மக்கள் பணி-மக்களவைத் தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். சட்டமன்றத் தேர்தல் 2026க்கு இப்போதிலிருந்தே பணிகளைத் தொடங்கிட வேண்டுமென்றும், இந்த ஆலோசனை கூட்டத்தின் வழியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக திகழும் திமுகவும் – திமுக அரசும், முன்னெடுத்து வரும் பணிகளைச் சிறுபான்மையின மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக அரசு அமைந்தது முதல் மீனவர் நலனில் அக்கறையுடன் எடுத்து வரும் நடவடிக்கைகளை பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க துணை நிற்பது, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. மீனவர்கள் வாழுகின்ற பகுதிகளில் திமுக பணியை திறம்பட மேற்கொண்டு, திமுக அரசின் திட்டங்களையும் முழு வீச்சில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

 

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: