இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது

திருமலை: காதல் வலையில் வீழ்ந்த இளம்பெண்ணை கடந்த 9 மாதங்களாக ஊர், ஊராக அழைத்துச்சென்று அவரிடம் இருந்த கம்மல், செல்போனை பறித்து விற்பனை செய்து சித்ரவதை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் விஜயவாடாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் திடீரென மாயமானார். அவரது தாய் சிவகுமாரி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போலீசில் புகார் அளித்தார். ஆனால் கடந்த 9 மாதங்களாகியும் மகள் கிடைக்காமல் வேதனையில் இருந்தார்.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வராக பதவி ஏற்ற பவன் கல்யாண், கடந்த மாதம் 22ம்தேதி தனது வீட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் சிவகுமாரி, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். பவன்கல்யாண் உத்தரவின்பேரில் போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாயமான இளம்பெண் தனது சகோதரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் இருக்கும் இடத்தையும் தன்னை அஞ்சாத் என்பவன் அழைத்து வந்துள்ளான் என தெரிவித்தார். இதனையடுத்து மாச்சவரம் போலீசார் விசாரணையில் இளம்பெண்ணும் வாலிபரும் ஜம்முவில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜம்மு சென்ற ஆந்திர போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் இருவரையும் பிடித்தனர். அவர்களை விஜயவாடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அஞ்சாத்திடம் விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:
இளம்பெண் கல்லூரிக்கு செல்லும்போது அஞ்சாத் (24) பின்தொடர்ந்து சென்று காதல் வலை வீசியுள்ளார். இதையறிந்த பெற்றோர் எச்சரித்தனர். இதனால் அஞ்சாத், கடந்த அக்டோபர் மாதம், இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி ஐதராபாத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்து கேரளா, பெங்களூரு, மகாராஷ்டிரா என்று ஊர் ஊராக அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து ஜம்முவுக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார். ஆனால் தாங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளார் அஞ்சாத். இதனால் ஐதராபாத் சென்றவுடன் இளம்பெண் அணிந்திருந்த தங்க கம்மலை வாங்கி விற்றுள்ளார். இளம்பெண் செல்போனில் யாரிடமும் பேசக்கூடாது என தடை விதித்த அஞ்சாத், அதையும் வாங்கி விற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு, இளம்பெண்ணை கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் அஞ்சாத் ஒருநாள் தனது செல்போனை மறந்து வீட்டிலேயே விட்டு சென்றார். இதை சாதகமாக்கிக்கொண்ட இளம்பெண், அந்த செல்போன் மூலம்தான் தனது சகோதரிக்கு தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். இதன்மூலம் இவர்களது இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்தோம். இவ்வாறு போலீசார் கூறினர். அஞ்சாத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து துணை முதல்வர் பவன்கல்யாண் நேற்று தனது சொந்த தொகுதியான பீதாபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:
தன்னிடம் கண்ணீருடன் வந்த ஒரு தாய், தனது மகள் கடந்த 9 மாதத்திற்கு முன் ஒரு வாலிபர் கடத்திச்சென்றதாக புகார் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்கும் காவல் ஆணையருக்கும் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அதன்பேரில் போலீசாரும் விரைந்து செயல்பட்டு புகார் தெரிவித்த 12 நாளில் இளம்பெண்ணையும், வாலிபரையும் மீட்டுள்ள போலீசாரை பாராட்டுகிறேன். கடந்த ஆட்சியில் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனார்கள். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆந்திர மக்கள் எங்கள் கூட்டணி கட்சிக்கு அளித்த வாக்குகள் காரணமாக 9 மாதத்திற்கு முன் மாயமான பெண்ணை தற்போது கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.

The post இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: