போக்குவரத்து நெரிசல் இனி இருக்காது!: ரூ.14.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாராவில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கண்கவர் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஆலந்தூர் கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்பட்ட க்ளோவர் இலை வடிவிலான மேம்பாலத்தை 2008ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார். இந்த பாலத்தின் கீழ் காலியாக இருந்த இடத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம், சி.எம்.டி.ஏ. நிதியுதவியுடன் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தின் வடிவமைப்பு சென்னை நகரின் அடையாளத்தையும், கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் ஆங்காங்கே உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து கொண்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், மைய பகுதியில் சிமெண்ட் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கத்தின் முழு பகுதியும் சூரிய சக்தி விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கத்திப்பாரா சதுக்கத்தில் 1.45 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கடைகள், கைவினை பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உள்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது. 25 பேருந்துகள் நிறுத்தும் வசதி; 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும் இந்த சதுக்கம் 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடம் கொண்டது. பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள பெரிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாராவில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கண்கவர் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர், மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கத்திப்பாரா சதுக்கத்தில் மரக்கன்றுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார். பின்னர்,  பேட்டரி வாகனத்தில் ஏறி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் பார்வையிட்டார்….

The post போக்குவரத்து நெரிசல் இனி இருக்காது!: ரூ.14.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: