ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்

*உள்ளாட்சிகள் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்

ஊட்டி : ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு இயக்கம் ஆலோசனை கூட்டம் குன்னூரில் நடந்தது.இதில் மீட்பு இயக்க உறுப்பினர் மனோகரன் பேசுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிகள் உள்ளன. பழங்குடிகள் வாழும் ஊர்களை உள்ளடக்கிய பகுதிகள் பேரூராட்சிகளாக இருப்பதால் மத்திய அரசின் திட்டங்கள் கிடைப்பதில்லை.

அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக இல்லை. இதனால் மக்கள் வாழ்க்கைத் தரம் உயராமல் உள்ளது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரூராட்சிகளை பொறுத்த வரை செயல் அலுவலர்களின் பணிப் பாதுகாப்புக்காகவே உள்ளன. மக்களிடம் கூடுதல் வரிவசூல் செய்து செலவழிக்கும் அமைப்புகளாகவே உள்ளன. எனவே பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்ற வேண்டும் என்றார்.

விவசாயம் மட்டுமே முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் நீலகிரி போன்ற மாவட்டத்தில் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தன்னாட்சி அமைப்பின் நிறுவனர் நந்தகுமார் விளக்கினார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை சிற்றூராட்சிகளாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன் பேசினார். தொடர்ந்து இக்கூட்டத்தில் ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றுவதை கைவிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளையும் ஊராட்சிகளாக மாற்ற வேண்டும். மாவட்ட கலெக்டர் ஏற்கனவே பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பியுள்ள ஊராட்சிகளை சிற்றூராட்சிகளாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கைகாட்டி சுப்ரமணியன், உலிக்கல் ராஜேஷ், இளித்தொரை ஆல்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: